கோவையில் மாற்றுத்திறனாளிப் பெண் உதவி விவகாரம்: தவெக எம்எல்ஏ மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இடையே மோதல்

கோவை துடியலூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் சேர்த்த விவகாரத்தில், தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரிடையே உரிமை கோரும் சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை துடியலூர் அருகே உள்ள என்ஜிஜிஓ காலனி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய பெண் ஒருவர் அத்துமீறலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாப்பாகக் காப்பகத்தில் சேர்ப்பதில் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் மற்றும் எஸ்டிபிஐ அமைப்பினர் என இரு தரப்பினரிடையே உரிமை கோரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குச் சொந்த வீடு இருந்தபோதிலும், கவனிப்பார் யாரும் இல்லாத சூழலில், அவரை அவரது சகோதரி தங்கியிருக்கும் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்க எஸ்டிபிஐ அமைப்பினர் முயன்றனர். இதற்காகக் கவண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷிடம் பரிந்துரை கடிதம் ஒன்றையும் பெற்றனர். ஆனால், அங்கு முறையான அனுமதி கிடைக்காததால், வேறொரு தனியார் காப்பகத்தில் அந்தப் பெண்ணைச் சேர்த்ததாக எஸ்டிபிஐ நிர்வாகி எம். அமீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எம்எல்ஏ கனிமொழி சந்தோஷின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில், அந்தப் பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்த பெருமை எம்எல்ஏவையே சாரும் எனப் பதிவிட்டிருந்தனர். இது குறித்துக் கருத்து தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர், தாங்கள் கடிதம் வாங்கியது உண்மைதான் என்றாலும், காப்பகத்தில் சேர்க்கப்பட்ட போது அந்தக் கடிதம் பயன்படுத்தப்படவில்லை என்றும், அரசியல் ஆதாயத்திற்காகவே எம்எல்ஏ அலுவலகத்தினர் புகைப்படங்களைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த தவெகவின் ஒன்றியச் செயலாளர் வி. நிதின், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுவதற்காகவே எம்எல்ஏவிடம் பரிந்துரை கடிதம் பெற்று வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சமூக சேவை என்ற நோக்கில் நடந்த ஒரு நிகழ்வில் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பது உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வித விளம்பரமும் இன்றி பாதிக்கப்பட்டவருக்கு உதவ முற்பட்டபோது, அதனை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவது சரியல்ல என்று எஸ்டிபிஐ தரப்பினர் தங்களது விளக்கத்தை முன்வைத்துள்ளனர்.









