கோவையில் பொறியியல் மாணவர் கொலை: மேலும் 5 பேர் கைது - பின்னணியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

கோவையில் பொறியியல் மாணவர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கே.அமுதன் (19) கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்ச்சியாக குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் மூன்று சந்தேக நபர்களை சிறப்பு காவல் படை குழுவினர் கைது செய்துள்ளனர். கே.ஸ்ரீராம் (21), எஸ்.லலித் ஆதித்யா (20) மற்றும் பி.ஹரிஷ் பாண்டியன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். மாணவர் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த கும்பல் மோதலில், இவர்கள் முக்கியப் பங்காற்றியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை நடத்தி வரும் அதே வேளையில், மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.ஹரிதாஸ் (18) மற்றும் எஸ்.உதயகுமார் (18) ஆகிய இருவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டி பணம் பறிக்கும் விவகாரமே, மாணவர் உயிரிழப்புக்கு வித்திட்ட மோதலுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை மையமாக வைத்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை பல மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 11 பேரை காவல்துறை தேடி வருகிறது. கல்லூரி நிர்வாகம் தரப்பில் சுமார் 15 மாணவர்களின் விவரங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









