dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கோவையில் மதகு உடைந்ததால் தவிக்கும் விவசாயிகள்: 300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

By Admin
31/08/2026
53 views
கோவையில் மதகு உடைந்ததால் தவிக்கும் விவசாயிகள்: 300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே குளத்துப்பாளையம் ஏரியின் மதகு சேதமடைந்ததால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா, கலியாபுரம் கிராமத்தில் உள்ள சுள்ளிமேட்டுப்பதி பகுதியில் குளத்துப்பாளையம் ஏரி அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, உப்பாற்றின் மூலம் நீர்வரத்தைப் பெற்று ஆண்டுக்கு 91.50 மில்லியன் கன அடி நீர் சேமிக்கும் திறன் கொண்டது. நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் மூலம் சுமார் 610 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய நிலங்களில் தென்னை மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் (TNIAMP) நான்காவது கட்டத்தின் கீழ், சுமாா் 34.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த ஏரி மற்றும் இதர பாசனக் கால்வாய்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய மதகுகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், தற்போது இந்த ஏரியின் முக்கிய மதகு எதிர்பாராதவிதமாக உடைந்து, நீர்வழிப்பாதையை மறிக்கும் வகையில் தண்ணீருக்குள் விழுந்து கிடக்கிறது. இதனால், ஏரியில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இருந்தும், விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

வெட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த விவசாயி எம்.சக்திவேல் கூறுகையில், தற்போது நெற்பயிர்கள் பால் பிடிக்கும் முக்கியமான பருவத்தில் இருப்பதாகவும், தண்ணீர் பற்றாக்குறையினால் பயிர்களின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஐ.ஆர்.50, கோ.50 மற்றும் டி.பி.எஸ்.5 போன்ற ரகங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலையில், 120 நாட்கள் கொண்ட இந்த பயிர்கள் தற்போது 60 நாட்களைக் கடந்துள்ளன. ஆனால், மதகு உடைந்ததன் காரணமாக ஏரியில் இருந்து கால்வாய்களுக்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால், வயல்களில் தேவையற்ற களைகள் முளைத்து விளைச்சலைச் சீரழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. மதகினை உடனடியாகச் சீரமைத்து நீர் திறப்பை உறுதி செய்யாவிட்டால், 300 ஏக்கர் பரப்பிலான நெல் விவசாயம் பெரும் இழப்பைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு சேதமடைந்த மதகினைச் சரிசெய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கோயம்புத்தூர்
#விவசாயம்
#நெல்சாகுபடி
#நீர்வளத்துறை
#ஆனைமலை
#Coimbatore
#Agriculture
#PaddyCultivation
#WaterResources
#Anaimalai
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications