dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனையில் நவீன டிஜிட்டல் பதிவு முறை அறிமுகம்: நோயாளிகளின் காத்திருப்பு நேரத்திற்கு முற்றுப்புள்ளி

By Admin
07/09/2026
26 views
கோவை அரசு மருத்துவமனையில் நவீன டிஜிட்டல் பதிவு முறை அறிமுகம்: நோயாளிகளின் காத்திருப்பு நேரத்திற்கு முற்றுப்புள்ளி

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க ஒருமுறை பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் தரவுகளை முறைப்படுத்தவும், சிகிச்சைக்கான காத்திருப்பு நேரத்தை பெருமளவில் குறைக்கவும் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு எனப்படும் HMIS 3.0 முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தரவு சேகரிப்பு, மருத்துவக் கோப்புகளைப் பராமரித்தல் மற்றும் மருத்துவக் கிளினிக் பணிகளை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படுவதோடு, ஒரே நோயாளிக்கு மீண்டும் மீண்டும் புதிய பதிவுகள் உருவாக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணைப் பயன்படுத்தி, வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் தனித்துவமான நோயாளி அடையாள அட்டை (Unique Patient ID) வழங்கப்படுகிறது. இதனால், மாநிலத்திலுள்ள எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும்போது, ஒவ்வொரு முறையும் தனித்தனியாக வெளிநோயாளி (OP) பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், நோயாளிகள் தங்கள் ஏபிஹெச்ஏ (ABHA) எண்களை ஒருமுறை வழங்கினால், மருத்துவர்கள் அவர்களின் முந்தைய மருத்துவ அறிக்கைகளை எளிதாக அணுகி, துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும்.

நோயாளிகளுக்கு எவ்விதத் தடங்கலும் இன்றி பதிவு பணிகளை மேற்கொள்வதற்காக, மருத்துவமனை வளாகத்தில் ஆறு பிரத்யேக வெளிநோயாளி பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆதார் மற்றும் ஏபிஹெச்ஏ இணைப்புக்குத் தேவையான ஓடிபி (OTP) வசதி கிடைக்காத நோயாளிகளுக்கு, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கைரேகை அங்கீகாரம் மூலம் மாற்று வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு உதவுவதற்காக பத்து செவிலியர் மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்களின் வசதிக்காக இ-நலம் (eNalam) செயலி மூலமாகவும் நோயாளிகள் தங்கள் பதிவுகளைச் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செயலி மூலம் பதிவு செய்தவர்களுக்கு டோக்கன்களை அச்சிட்டு வழங்க கூடுதல் இரண்டு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கைபேசி செயலி மூலம் சுமார் இரண்டு நிமிடங்களில் டோக்கன்களைப் பெற்று, ஒரு நிமிடத்தில் அச்சிட்டு பெற்றுக்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட வெளிநோயாளி பிரிவுக்குச் செல்ல முடியும். மருத்துவமனை நிர்வாகம், இந்த பதிவு செயல்முறைகள் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய தினமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பதாகைகளை வைப்பதன் மூலமும், நோயாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலமும் இந்த புதிய டிஜிட்டல் முறை முழுமையான பயனைத் தரும் என்று மருத்துவமனை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கோவை
#அரசுமருத்துவமனை
#டிஜிட்டல்இந்தியா
#மருத்துவசேவை
#பொதுநலம்
#Coimbatore
#CMCH
#DigitalHealth
#HealthcareUpdate
#PublicService
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications