கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை

கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரக (DVAC) அதிகாரிகள் அதிரடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் நூலக வளாகத்தில் உள்ள ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்த சோதனையின் போது, புத்தகக் கொள்முதல் தொடர்பான பதிவேடுகள், விற்பனைப் பட்டியல்கள், விலைப் பட்டியல்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சரிபார்த்தனர். குறிப்பாக, எந்தெந்த பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் வாங்கப்பட்டன, இதற்கான கொள்முதல் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் யார், மற்றும் கொள்முதல் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து நூலக ஊழியர்களிடம் அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததன் மூலம், புத்தகக் கொள்முதல் நடைமுறைகளில் ஏதேனும் நிதி முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் நடந்திருக்கிறதா என்பது விரைவில் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் கல்வித்துறை மற்றும் நூலகத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் எதிரொலித்து வருகின்றன. திருச்சியில் அமையவிருந்த காமராஜர் அறிவுலகத்திற்காக சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை கொள்முதல் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாவட்டத்திலுள்ள பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,510 புத்தகங்களின் விநியோகமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.









