கோவை சசிகுமார் கொலை வழக்கு: பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை - என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி

கோவை இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சி.சசிகுமார் கொலை வழக்கில் பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்த சி.சசிகுமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சிறப்பு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்பின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சதம் உசேன், சுபைர், முபாரக் மற்றும் முகமது ரபிகுல் ஹசன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் பி.எஃப்.ஐ அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் செயல்பாட்டாளர்கள் மீதான வழக்கில் என்.ஐ.ஏ அமைப்பு பெற்றுள்ள முதல் தண்டனைத் தீர்ப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி கோயம்புத்தூரில் சி.சசிகுமார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன்முறையைத் தூண்டியது. இதனால் சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கானது ஆரம்பத்தில் கோவை துடியலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சி.பி-சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு, மத்திய அரசின் உத்தரவின்படி 2018-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டு மறுபதிவு செய்யப்பட்டது. என்.ஐ.ஏ மேற்கொண்ட தீவிர விசாரணையில், கைதானவர்கள் பி.எஃப்.ஐ அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்பதும், சமூகத்தில் பயங்கரவாதத்தைப் பரப்பி வகுப்புவாத மோதல்களைத் தூண்டும் நோக்கில் சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையைச் செய்ததும் உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு விசாரணையில், அரசுத் தரப்பில் 75 சாட்சிகளும், பாதுகாப்புத் தரப்பில் இரண்டு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 120-பி, 153-ஏ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்தாவது நபரான அபு என்கிற சையத் அபுதாஹிரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









