கோவை சூலூர்: தொழிற்சாலை மாசினால் கருகும் பயிர்கள் - வேதனையில் விவசாயிகள்

கோவை சூலூர் அருகே உள்ள வார்ப்பட தொழிற்சாலையால் விவசாய பயிர்கள் அழிந்து வருவதாகவும், பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்தில் உள்ள அப்பநாயக்கன்பட்டி மற்றும் காரடிவாவி கிராமங்களில் இயங்கி வரும் வார்ப்பட தொழிற்சாலை (Casting Unit) ஒன்று, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையும், துர்நாற்றம் வீசும் கழிவுகளும் சுற்றுப்புறச் சூழலை கடுமையாகப் பாதிப்பதாக இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களிலும், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த தொழிற்சாலை கட்டுப்பாடின்றி நச்சுப் புகையை வெளியேற்றுவதாக இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுபட்ட காற்றினால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பி. வடிவேல் என்ற விவசாயி இது குறித்துக் கூறுகையில், தங்களின் அடிப்படை வாழ்வாதாரமே தொழிற்சாலையின் செயல்பாடுகளால் முடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். பயிர்கள் அழிவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களை விற்க நிலத் தரகர்கள் அழுத்தம் கொடுப்பதும் விவசாயிகளிடையே மன உளைச்சலை அதிகரித்துள்ளது.
இந்த நச்சுப் புகையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினைகள், தொண்டை புண், இருமல், நெஞ்சு வலி மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கால்நடைகளின் உயிரிழப்புகளும் தொடர்ந்து பதிவாகி வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். சுமார் பத்து ஆண்டுகளாகத் தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களைப் பயிரிட்டு வரும் கே. சண்முகம் என்ற விவசாயி, ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தும், மாசு காரணமாகப் பயிர்கள் கருகி பெரும் நிதி இழப்பைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து இத்தகைய இழப்புகள் ஏற்படுவது விவசாயிகளை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்களை அளித்தும் இதுவரை முறையான தீர்வு கிடைக்கவில்லை. அதிகாரிகள் ஆய்வுக்கு வந்து செல்கிறார்களே தவிர, தொழிற்சாலையின் மீது எந்தவிதமான நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். தங்கள் நிலங்களையும், வாழ்வாதாரத்தையும், உடல்நலத்தையும் பாதுகாக்க அரசு உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் மாசு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.









