dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கோயம்புத்தூர் வாலாங்குளம் ஏரியில் மோட்டார் படகுகளுக்குத் தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Admin
25/09/2026
40 views
கோயம்புத்தூர் வாலாங்குளம் ஏரியில் மோட்டார் படகுகளுக்குத் தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோயம்புத்தூர் உக்கடம் வாலாங்குளத்தில் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகளை இயக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள உக்கடம் வாலாங்குளம் ஏரியில் சுற்றுலாவிற்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளை உடனடியாக நிறுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஏரியில் வசிக்கும் மற்றும் வலசை வரும் பறவைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி, பெட்ரோல் மூலம் இயங்கும் படகுகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது கவலையளிப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, வாலாங்குளம் ஏரியின் தற்போதைய சூழல் பறவைகளுக்குத் தேவையான பல்வகைப்பட்ட வாழ்விடங்களை இழந்திருப்பதாகத் தெரிகிறது. ஏரியில் நீர்வாழ் தாவரங்கள், சதுப்பு நிலங்கள், உயரமான புல்வெளிகள் மற்றும் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற மேடான பகுதிகள் குறைந்து காணப்படுகின்றன. மாறாக, பொழுதுபோக்கு அம்சங்கள், செயற்கை மின்விளக்குகள் மற்றும் வணிகக் கூடங்கள் போன்றவை ஏரியின் இயற்கை சமநிலையைப் பாதிப்பதாக நீதிமன்றம் தனது அவதானிப்பில் குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல் இன்ஜின் படகுகளால் ஏரியின் நீர்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ள நீதிபதிகள், அவற்றிற்கு மாற்றாக சாதாரண பெடல் படகுகளை மட்டுமே பயன்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். பொழுதுபோக்கு நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது ஏரியின் சூழலியல் முக்கியத்துவத்தை மாநகராட்சி முறையாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதனுடன், ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றுவதையும், அவை மீண்டும் வளராமல் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாலாங்குளம் ஏரியானது பறவைகளின் புகலிடமாக விளங்கும் ஒரு முக்கியமான பகுதியாகும். இந்த ஏரியில் மொத்தம் 183 வகையான பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 126 இனங்கள் அப்பகுதியிலேயே வாழும் பறவைகள், 57 இனங்கள் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் ஆகும். உலகளவில் ஆபத்தான நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்ட எட்டு பறவை இனங்கள் இந்த ஏரியில் காணப்படுகின்றன. இதில் குறிப்பாக ஆற்று ஆலா மற்றும் கர்லியூ சாண்ட்பைப்பர் போன்ற அருகிவரும் இனங்கள் உள்ளதால், ஏரியின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கோவை
#வாலாங்குளம்
#உயர்நீதிமன்றம்
#சுற்றுச்சூழல்
#பறவைகள்
#Coimbatore
#Valankulam
#MadrasHighCourt
#Environment
#BirdsConservation
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications