வேளாண் நில பயன்பாட்டு மாற்றத்திற்கு இனி ஆட்சியர் அனுமதி தேவையில்லை - தமிழக அரசு அதிரடி

வேளாண் நிலங்களை மாற்றுவதற்கான அனுமதியில் மாவட்ட ஆட்சியரின் பங்கு நீக்கப்பட்டு, அந்த அதிகாரம் நகர் ஊரமைப்பு இயக்ககத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நில பயன்பாட்டு மாற்ற நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் முக்கிய கொள்கை முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, வேளாண் நிலங்களை வேளாண்மை அல்லாத பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கு இனி மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அடுத்து, இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நவம்பர் 4-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்தின்படி, இனி சம்பந்தப்பட்ட நிலங்களை மாற்றுவதற்கான முன் அனுமதி வழங்கும் அதிகாரம் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு (DTCP) மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய முறையின்படி, விண்ணப்பதாரர்கள் முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, அதன் பின்னரே திட்டமிடல் அனுமதி கோரி நகர் ஊரமைப்பு இயக்ககத்தை அணுக வேண்டியிருந்தது. இந்த நீண்ட கால தாமதத்தைத் தவிர்க்கவே, ஆட்சியரின் பங்கு நீக்கப்பட்டு, முழு அதிகாரமும் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் ஆர். கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறையினால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் காலம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு இத்தகைய அனுமதி பெற இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகிவந்த நிலையில், இனி 15 முதல் 30 நாட்களுக்குள் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் எஸ். ராமபிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், இந்த மாற்றம் பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்துவதாகக் கருதப்படக் கூடாது என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாற்றத்திற்கான அனைத்துத் துறைகளின் தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC) பெறுவது இப்போதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் கோரிக்கைகளை ஆன்லைன் சிங்கிள் விண்டோ போர்ட்டல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக விற்பனை ஆவணம், பட்டா, சிட்டா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான அடங்கல், நிலத்தின் வரைபடம் மற்றும் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள நிலங்களின் நிலை குறித்த வரைபடம் உள்ளிட்ட ஒன்பது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், அந்த நிலத்தில் அரசு புறம்போக்கு நிலங்களோ அல்லது மற்றவர்களின் நிலங்களோ இல்லை என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் வழங்க வேண்டும். ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு விதிகளில் இருந்த மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு மற்றும் பரிசீலனை விதிகள் நீக்கப்பட்டாலும், நகர் ஊரமைப்பு இயக்குநருக்கான பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.









