dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழகக் கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை: செப்டம்பர் 1 முதல் நடைமுறை

By Admin
09/08/2026
77 views
தமிழகக் கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை: செப்டம்பர் 1 முதல் நடைமுறை

தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோவில்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியக் கோவில்களிலும் பக்தர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்குத் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்தத் தடை உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் அமைதியான வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, கோவிலின் கருவறை மற்றும் வளாகத்திற்குள் செல்போன் மூலம் புகைப்படங்கள் எடுப்பதோ, காணொளிகளைப் பதிவு செய்வதோ அல்லது சமூக ஊடகங்களுக்காக ரீல்ஸ் (Reels) எடுப்பதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கோவிலுக்கு வருகை தரும் விஐபிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் செயல்பாடுகளைப் படம்பிடிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், கோவில் நுழைவு வாயில்களிலேயே தகுந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோவில் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு செல்போனுக்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை அமைப்பின் (ITMS) மூலம் முறையாக ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே இது தொடர்பான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டிருந்தாலும், சில பக்தர்கள் செல்போன்களை மறைமுகமாக உள்ளே எடுத்துச் சென்று புகைப்படம் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில், கோவில் நுழைவாயில்களில் செல்போன் தடை குறித்த அறிவிப்புப் பலகைகளை வைக்கவும், ஒலிபெருக்கிகள் மூலம் பக்தர்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவில் நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகக்கோவில்கள்
#அறநிலையத்துறை
#செல்போன்தடை
#வழிபாட்டுத்தலம்
#தமிழகச்செய்திகள்
#TempleBan
#TamilNaduTemples
#MobileBan
#HRCE
#DevotionalNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications