வெறுப்புப் பேச்சு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிணையில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

வெறுப்புப் பேச்சு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த திமுக தலைவரான பொன்முடிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் மூன்றாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (Non-bailable warrant) பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில், வைணவர்கள், சைவர்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி பொன்முடி தரப்பில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 355-இன் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி நிராகரித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது வழக்கின் போக்கை முடக்கும் வகையில் உள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார். மேலும், உடல்நிலை பாதிப்பு போன்ற எவ்வித மருத்துவ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், இந்த விலக்கு கோரும் மனுவை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்த வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததை இந்தச் சூழலில் விசாரணை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் புகார்தாரர் தரப்பு வழக்கறிஞரின் கடுமையான ஆட்சேபனைகளை கவனத்தில் கொண்டு, பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே இந்த வாரண்ட் பிறப்பிக்கப்படுவதாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 2, 2026 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இந்த வழக்கினை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இந்த வழக்கை ஆறு மாத காலத்திற்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது. சட்டப்பூர்வமான இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்திலும் பொதுவெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









