பள்ளி அனுமதி முறைகேடு விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி அதிரடி சோதனை

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க பணம் வசூலித்ததாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு முறையான அரசு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்ததாக எழுந்த புகாரில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான நான்கு இடங்களிலும், அவரது உதவியாளர் வளாடி கார்த்திக் தொடர்புடைய இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சியில் உள்ள தென்னூர் அண்ணா நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் காலை 7.30 மணி அளவில் சோதனை தொடங்கியது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையின் போது திமுக ஆதரவாளர்கள் அவரது இல்லத்திற்கு வெளியே பெருமளவில் திரண்டனர். மேலும், இந்தச் சோதனையின் போது மூத்த அமைச்சரான கே.என்.நேரு அங்கு வருகை தந்து, வீட்டிற்கு வெளியே காத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திமுக தலைவர்கள் மீது அரசியல் உள்நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். தன்னிடம் அன்பில் மகேஷ் தொலைபேசியில் பேசியதாகவும், சோதனை முடிந்த பிறகு நேரில் வருவதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கானது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல், டி.டி.சி.பி அனுமதி மற்றும் பிற அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் ஏற்கனவே சாலி கிராமத்தைச் சேர்ந்த பி.டி.அரசகுமார் என்பவர் ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உட்பட 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதோடு, முக்கிய அரசு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், சுமார் 177 தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடியுடன் தொடர்புடைய பி.டி.அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் 20 வங்கி கணக்குகளும், ஏ2 முத்துகுமரன் என்பவருடன் தொடர்புடைய 29 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, அவர்களின் குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் டி.பி.ஐ வளாகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









