கடலூர்: அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் - நூலகப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி செயல்பாடுகள் மற்றும் நூலகக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி சார்ந்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார். இதன்பொருட்டு, வரக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வகுப்பறை செயல்பாடுகளை அவர் பார்வையிட்டார். அங்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற கணிதப் பாடத்தை கவனித்த ஆட்சியர், மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களையும் ஆய்வு செய்தார். குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்றும் உச்சரிப்புத் திறனை அவர் பரிசோதித்தார். மேலும், வருகைப் பதிவேடுகளையும் சரிபார்த்த அவர், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் மீது ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவ்வப்போது அவர்களின் முன்னேற்றத்தை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, செம்மண்டலம் குண்டுசாலையில் பள்ளி கல்வித் துறையின் சார்பில் சுமார் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நான்கு அடுக்கு மாடிகளைக் கொண்ட 'அஞ்சலை அம்மாள் அறிவுலகம்' நூலகக் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்தப் பணிகளை விரைந்து முடித்திடவும், கட்டுமானத்தின் தரத்தில் சமரசம் இன்றி உயர்தரமான பணிகளை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். திட்டமிட்ட காலத்திற்குள் இப்பணியை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அரசுப் பள்ளி ஆய்வைத் தொடர்ந்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பங்கேற்றார். 'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' திட்டத்தின் கீழ், புதிதாகப் பிறந்த 100 பெண் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் குழந்தைப் பராமரிப்பு உபகரணங்களை அவர் வழங்கினார். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் ஒன்றாக கடலூர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம் மற்றும் பதின்ம வயது கர்ப்பத்தைத் தடுப்பது, அதேபோல் பெண் கல்வியை ஊக்குவிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் குறிப்பிட்டார். மேலும், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தங்களின் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், குழந்தையின் பிறப்புக்குப் பிந்தைய முதல் 1,000 நாட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தாய்மார்களுக்கு வலியுறுத்தினார்.









