கடலூர்: காவல் நிலையம் புகுந்து பெண் தீக்குளிப்பு - பணி ஒதுக்கீடு தொடர்பான தகராறால் கொடூர சம்பவம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணி ஒதுக்கீடு தொடர்பான தகராறில் காவல் நிலையம் புகுந்து பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை காவல் நிலையத்தில், பணி ஒதுக்கீடு தொடர்பான முன்விரோதத்தால் பெண் ஒருவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரையூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான எல். கண்மணி என்பவர், அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். அந்த கிராமத்தின் செயலாளர் அருளுக்கும், கண்மணிக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாகவே பணி ஒதுக்கீடு தொடர்பான மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்திருந்தனர். அருள் தாக்கியதாகக் கண்மணியும், தன்னை கண்மணி மற்றும் அவரது கணவர் லக்ஷாதிபதி ஆகியோர் தாக்கியதாக அருளும் புகார் அளித்து இருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், விசாரணைக்காக இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைப்பு விடுத்தனர். இதன்படி காவல் நிலையம் வந்த கண்மணியின் கணவரை, போலீசார் விசாரணைக்காக உள்ளே அமர வைத்தனர். தனது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவரை விடுவிக்குமாறும் கண்மணி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.
காவல்துறையினர் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான கண்மணி, காவல் நிலையத்திற்கு வெளியே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பிடித்த நிலையிலேயே அவர் அலறியபடி காவல் நிலையத்திற்குள் ஓடிச் சென்றார். அங்கிருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 40 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக அவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கண்மணியின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் சரக டிஐஜி ஏ. அருளரசு மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சரிசெய்தனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே தொடர்ந்து நிலவி வந்த மோதலைக் கையாள காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.









