கோவையில் பகல் கொள்ளை: ஹைதராபாத் வியாபாரியிடம் ரூ.1.06 கோடி பறிப்பு - 3 பேர் கைது!

கோவையில் நகை வியாபாரியிடம் 1.06 கோடி ரூபாய் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில், ஹைதராபாத்தைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து 1.06 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பறித்த வழக்கில் மூன்று நபர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபரான தமம் ரங்கசாமி (65), கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் கோவை வந்தடைந்துள்ளார். அவர் ஒப்பணக்கார வீதிக்குச் செல்ல வாகனத்திற்காகக் காத்திருந்தபோது, கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் அவரிடம் பேச்சுக்கொடுப்பது போல நடித்து, வன்முறையைப் பயன்படுத்தி பணப்பையைத் திருடிச் சென்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர், நான்கு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு வாகனத்தைத் தொடர்ந்து கண்காணித்த காவல் துறையினர், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வைத்து கொள்ளையர்களை மடக்கினர். கைது செய்யப்பட்டவர்களில் முகேஷ் குமார் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோரும் அடங்குவர். ஆரம்பகட்ட விசாரணையில், புனே மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு கும்பல்கள் இணைந்து இந்தத் திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் புனே மற்றும் பெங்களூருவில் தங்கியிருந்து இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்கள் பொதுப் போக்குவரத்தில் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டு செல்லும் நபர்களைக் குறிவைத்துத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். முன்னதாக சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட இவர்களுக்கு, கோவை நகை வியாபாரிகள் குறித்து நன்கு தெரிந்திருந்ததால், தமம் ரங்கசாமியை இலக்காகக் கொண்டு துல்லியமாகத் திட்டமிட்டு இந்தச் செயலை நிறைவேற்றியுள்ளனர்.
கொள்ளையர்கள் போலியான எண் பலகைகள் பொருத்தப்பட்ட கார்களைப் பயன்படுத்தித் தப்பித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்துடன் இரண்டு பேர் ராஜஸ்தானுக்குத் தப்பி ஓடியுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை போன பணத்தைப் பங்கு பிரிப்பதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதற்கிடையில், திருப்பூரில் இருந்த இவர்களது கூட்டாளிகளின் உதவியுடன் மற்றொரு வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது சிக்கியுள்ளனர். மீதமுள்ள நான்கு நபர்களைப் பிடிக்கவும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்கவும் காவல் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.









