டிசி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அதிரடி மாற்றம்: புதிய தலைவராக ஜெர்மி லாட்சம் நியமனம்

டிசி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைவர்களாக ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சப்ரான் விலகி, புதிய தலைவராக ஜெர்மி லாட்சம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய மாற்றமாக, டிசி ஸ்டுடியோஸ் (DC Studios) நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரிகளாகப் பணியாற்றி வந்த ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சப்ரான் ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் டிசி ஸ்டுடியோஸின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த இவர்கள், சுமார் நான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்தை வழிநடத்தியுள்ளனர். இவர்களின் மாற்றத்தைத் தொடர்ந்து, ஸ்கைடான்ஸ் மோஷன் பிக்சர் குழுமம் (Skydance Motion Picture Group) புதிய தலைவரை அறிவித்துள்ளது.
புதிய தலைவராகவும், தலைமை ஆக்கபூர்வ அதிகாரியாகவும் (President and Chief Creative Officer) ஜெர்மி லாட்சம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மார்வெல் ஸ்டுடியோஸில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அயன் மேன், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி, ஸ்பைடர் மேன் மற்றும் அவெஞ்சர்ஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்புகளில் முக்கியப் பங்காற்றியவர். இனி வரும் காலங்களில் டிசி நிறுவனத்தின் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகளுக்கான தயாரிப்பு மற்றும் ஆக்கபூர்வமான வியூகங்களை இவர் முன்னின்று கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் குறித்து ஸ்கைடான்ஸ் மோஷன் பிக்சர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் எலிசன் மற்றும் இணை சிஇஓ யனோன் க்ரீஸ் ஆகியோர் கூறுகையில், ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சப்ரான் டிசி ஸ்டுடியோஸின் கட்டமைப்பை மாற்றி அமைத்து, புதிய சகாப்தத்தை உருவாக்கித் தந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஜெர்மி லாட்சம் நீண்டகாலமாக இவர்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான பங்காளியாக இருந்து வந்துள்ளார் என்பதால், இந்தத் தலைமை மாற்றம் மிகவும் சுமூகமாகவும், அதே உற்சாகத்துடனும் தொடரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பதவியில் இருந்து விலகினாலும் ஜேம்ஸ் கன் டிசி உலகத்துடனான தனது பிணைப்பைத் தொடர உள்ளார். குறிப்பாக 2025 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான 'மேன் ஆஃப் டுமாரோ' (Man of Tomorrow) படத்தின் பணிகளை அவர் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும், இப்படம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், பீட்டர் சப்ரானுடன் இணைந்து 'தி பேட்மேன் பார்ட் 2' (The Batman Part 2) திரைப்படத்திற்குத் தயாரிப்பாளராகவும் அவர் பணியாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









