அரசியல் களத்தில் தனுஷ்? நற்பணி இயக்கத்தை பலப்படுத்தும் நடிகர் - 234 தொகுதிகளிலும் கட்டமைப்பு தீவிரம்

நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விரிவுபடுத்தி, வரும் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை முறைப்படுத்தப்பட்ட நற்பணி இயக்கமாக மாற்றி, தமிழகம் முழுவதும் அதன் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக திரைத்துறையில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் அவர், இதுவரை தனது அரசியல் வருகை குறித்து வெளிப்படையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றாலும், தற்போது மேற்கொள்ளப்படும் இந்த அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் அவரது அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களை வலுப்படுத்தியுள்ளன.
தற்போது தமிழகம் முழுவதும் 58 அமைப்பாகச் செயல்படும் இந்த நற்பணி இயக்கத்தை, மாநிலத்தின் அனைத்து 38 வருவாய் மாவட்டங்களிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கவும், தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வலுவான கிளைகளை உருவாக்கவும் தனுஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில், ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியமைப்பது குறித்து முறைப்படி ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு பகுதியாக, பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க தனுஷ் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக, அக்டோபர் 25 ஆம் தேதி சென்னையின் ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் நேரடியாக ஆலோசனை நடத்தினார். அடிமட்ட அளவில் இயக்கத்தைப் பலப்படுத்துவதன் மூலம், வெறும் ரசிகர் மன்றமாக மட்டுமன்றி, ஒரு முழுமையான மக்கள் இயக்கமாக இதை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
வரவிருக்கும் 2027 உள்ளாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டே இந்த முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்காக 2031 வரை காத்திருக்காமல், உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி தற்போதே அரசியல் சூழலை உள்வாங்கிக் கொள்ளவும், தேர்தல் களத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்தவும் தனுஷ் தரப்பு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தனுஷின் இந்த அரசியல் நகர்வு, தமிழகத்தின் எதிர்கால அரசியல் களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.









