dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தருமபுரி எலக்கியம்பட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்படும் மழைநீர் வடிகால்கள் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

By Admin
02/10/2026
116 views
தருமபுரி எலக்கியம்பட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்படும் மழைநீர் வடிகால்கள் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம் எலக்கியம்பட்டியில் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாக மையங்களில் ஒன்றாகத் திகழும் எலக்கியம்பட்டி பகுதியில், மழைநீர் வடிகால்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தருமபுரி மற்றும் சேலம் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் இந்த முக்கிய பகுதியில் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை தலைமையகம் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலகங்கள் அமைந்திருந்தாலும், பொதுமக்களின் வசிப்பிடங்களில் உள்ள அடிப்படை கட்டமைப்புகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் தற்போது முறையாகப் பராமரிக்கப்படாமல், உள்ளூர் வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட வடிகால்கள், வணிக நிறுவனங்களின் வாகன நிறுத்துமிடங்களாகவும், நுழைவு வாயில்களாகவும் மாற்றப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, மழைக்காலங்களில் வடிகால்கள் வழியே வெளியேற வேண்டிய நீர், குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் கோயில்களையும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

வடிகால் ஆக்கிரமிப்புகளால் தேங்கும் நீரினால் கொசுக்கள் பெருகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. ஒரு சில இடங்களில் பெயரளவில் மட்டுமே சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், நீண்ட தூர வடிகால்களில் மிகச்சிறிய பகுதி மட்டுமே தூர்வாரப்படுவதால், தண்ணீர் தேங்கும் பிரச்சனை மீண்டும் தொடர்வதாக பாதிக்கப்பட்ட வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தருமபுரி எலக்கியம்பட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மக்களின் புகார்கள் ஏற்கனவே கவனத்தில் கொள்ளப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாகத் தற்போது தங்களுக்குப் புதிய மனுக்கள் எதுவும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், மழைக்காலங்களில் பொதுமக்கள் சந்திக்கும் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், முறையான மழைநீர் வடிகால் வசதியை உறுதி செய்யவும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தருமபுரி
#எலக்கியம்பட்டி
#மழைநீர்_வடிகால்
#ஆக்கிரமிப்பு
#செய்திகள்
#Dharmapuri
#Elakkiampatti
#StormwaterDrain
#Encroachment
#TamilNaduNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications