dhina anjal logo
முகப்பு/விளையாட்டுவிளையாட்டு

உருகுவே கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக தியேகோ ஃபார்லான் பொறுப்பேற்பு

By Admin
07/08/2026
73 views
உருகுவே கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக தியேகோ ஃபார்லான் பொறுப்பேற்பு

உருகுவே கால்பந்து அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் தியேகோ ஃபார்லான் நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்செலோ பியெல்சா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, உருகுவே கால்பந்து சங்கம் (AUF) முன்னாள் நட்சத்திர வீரர் தியேகோ ஃபார்லானை புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஃபார்லான் தற்காலிக அடிப்படையில் இந்த பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 47 வயதான தியேகோ ஃபார்லான், உருகுவேயின் மூத்த தேசிய அணி மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி ஆகிய இரண்டிற்கும் தலைமை தாங்குவார் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள சர்வதேச நட்புப் போட்டிகளில் ஃபார்லான் அணியை வழிநடத்துவார். அவரது ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் நீட்டிப்பதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த உலகக் கோப்பையில் சவூதி அரேபியா மற்றும் கேப் வேர்டே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் உருகுவே அணி சமநிலை கண்டது, இறுதியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. முந்தைய பயிற்சியாளர் மார்செலோ பியெல்சாவின் தந்திரங்கள் மற்றும் மூத்த கோல்கீப்பர் பெர்னாண்டோ மஸ்லேராவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது உள்ளிட்ட முடிவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. இதனால் உருகுவே கால்பந்து ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றம் நிலவிய சூழலில், ஃபார்லானின் நியமனம் ஒரு புதிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

தியெகோ ஃபார்லான் வீரராக உருகுவே அணிக்காக 112 போட்டிகளில் விளையாடி 36 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். குறிப்பாக 2010 உலகக் கோப்பை தொடரில் அரைஇறுதி வரை உருகுவே முன்னேறியதில் இவரது பங்கு மிக முக்கியமானது, அதற்காக அவருக்கு கோல்டன் பால் விருதும் கிடைத்தது. இருப்பினும், பயிற்சியாளராக பெனாரோல் மற்றும் அட்டேனாஸ் அணிகளில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஸ்பெயினின் வில்லாரியல் மற்றும் அத்லெட்டிகோ மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடிய காலங்களில் ஐரோப்பிய தங்க காலணி விருதை வென்று தனது திறமையை நிரூபித்த ஃபார்லான், தற்போது ஒரு பயிற்சியாளராக உருகுவே அணியை மீட்டெடுக்கும் சவாலான பணியில் ஈடுபட்டுள்ளார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#உருகுவே
#கால்பந்து
#தியெகோஃபார்லான்
#உலகக்கோப்பை
#விளையாட்டுச்செய்தி
#Uruguay
#Football
#DiegoForlan
#WorldCup
#SportsNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications