திண்டுக்கல்: கடன் பாக்கிக்காக ஆதிதிராவிடர் தம்பதி மீது தாக்குதல் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடன் வசூல் தொடர்பாக ஆதிதிராவிடர் குடும்பத்தைத் தாக்கி சாதிய ரீதியாக வசைபாடிய நபர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காரியப்பட்டியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதி, அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனம் ஒன்றில் சுய உதவிக்குழு கடன் பெற்றுள்ளனர். முருகேசன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி ஆகிய இருவரும் முறையே தலா 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஈஸ்வரி தனது கடனுக்கான கடைசி மூன்று மாதத் தவணைத் தொகையான 1,300 ரூபாயைச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தத் தவணைத் தொகையை வசூலிக்க நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி, முருகேசனின் வீட்டில் தம்பதி இல்லாத நேரத்தில், நிதி நிறுவன ஊழியர்கள் அங்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த 15 வயதுடைய சிறுமியின் புகைப்படத்தை எடுத்ததோடு, சிறுவனின் தந்தை மற்றும் தாயை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டிற்குத் திரும்பிய பெற்றோர், தங்கள் பிள்ளைகள் மூலம் நடந்த விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாகக் கேட்கச் சென்றபோது, அன்றைய தினம் இரவு நிதி நிறுவன உரிமையாளர் சிவா மற்றும் ஊழியர்கள் திலீப், சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேர், முருகேசன் மற்றும் ஈஸ்வரியை கிரிக்கெட் மட்டைகள் மற்றும் கட்டைகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களைத் தரக்குறைவாகச் சாதியப் பெயர்களைக் கூறி வசைபாடியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போதிலும், ஆரம்பத்தில் சாதாரண தாக்குதல் வழக்காக மட்டுமே பதியப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்துச் சமூக ஆர்வலர் சின்னக்கருப்பன் கூறுகையில், காவல்துறையினர் இந்த விவகாரத்தை மிகவும் லேசாகக் கையாண்டதாகவும், முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பிணையில் வெளியே வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தற்போது, இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, காவல்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதியப்பட்டிருந்த வழக்கைத் திருத்தி, தற்பொழுது நான்கு பேர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Prevention of Atrocities Act) கீழ் பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்துக் காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த வழக்கு இப்போது துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









