dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

திண்டுக்கல்: 15 ஆண்டுகளாக தெருவிளக்கு வசதியின்றி தவிக்கும் கே.எஸ்.நகர் மக்கள் - நிர்வாகம் அலட்சியம்?

By Admin
04/10/2026
65 views
திண்டுக்கல்: 15 ஆண்டுகளாக தெருவிளக்கு வசதியின்றி தவிக்கும் கே.எஸ்.நகர் மக்கள் - நிர்வாகம் அலட்சியம்?

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் கே.எஸ்.நகரில் கடந்த 15 ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி இன்றி 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.எஸ்.நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 15 ஆண்டுகளாக அடிப்படை வசதியான தெருவிளக்கு வசதி இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சூரியன் மறைந்த பிறகு இப்பகுதி முழுவதும் அடர் இருளில் மூழ்கிவிடுவதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர பெரும் அச்சத்தை எதிர்கொள்கின்றனர். முறையான சாலை வசதிகள் இல்லாதது மற்றும் சாலை ஓரங்களில் புதர்கள் மண்டி கிடப்பது போன்ற காரணங்களால், இருசக்கர வாகனங்களில் செல்வது கூட பெரும் சவாலாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த அவலநிலை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூறுகையில், தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு முறையாக அனுமதி பெற்று, வீடுகளுக்கு மின் இணைப்புகளைப் பெற்றுள்ளோம். சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் இப்பகுதியில் உள்ளன, ஆனால் இரவு 6 மணிக்கு மேல் இப்பகுதி முழுவதும் வெளிச்சம் இன்றி இருட்டாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடமாடுவதற்கு மிகுந்த அச்சமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TNPDCL) மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கையில், தெருவிளக்கு அமைப்பது மற்றும் பராமரிப்பது உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். மின் கட்டணம் செலுத்துவதும் அந்தந்த பஞ்சாயத்துகளின் பொறுப்பு. ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் இயற்றி, மின் கம்பங்கள் அமைப்பதற்கும் இணைப்பு பெறுவதற்கும் விண்ணப்பித்தால் மட்டுமே எங்களால் மதிப்பீடு செய்து மின்சாரம் வழங்க முடியும். ஆனால், இதுவரை ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து எவ்வித விண்ணப்பமும் வரவில்லை என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.நகர் பகுதி பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியின் விரிவாக்கப் பகுதியாக உருவாக்கப்பட்டதால், சில இடங்கள் இன்னும் பொதுப்பாதை பயன்பாட்டிற்காக ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. இப்பகுதிகளை முறைப்படி ஒப்படைத்த பின்னரே தெருவிளக்குகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். தற்போது நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்களை ஊராட்சி சந்தித்து வருவதால், ஊரக வளர்ச்சித் துறையுடன் கலந்தாலோசித்து, நில அளவீட்டுப் பணிகளை முடித்து விரைவில் தெருவிளக்கு வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#திண்டுக்கல்
#தெருவிளக்கு
#பாதுகாப்பு
#அடிப்படைவசதி
#ஊராட்சிநிர்வாகம்
#Dindigul
#StreetlightIssues
#PublicGrievance
#LocalAdministration
#TamilNaduNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications