அரசு மருத்துவமனை மருந்து கவர்கள்: இந்தி விவகாரத்தில் திமுக மீது அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனை மருந்து கவர்களில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்ற விவகாரத்தில் திமுக மீது அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் கரூர் மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட மருந்து கவர்களில் இந்தி மொழியில் அச்சிடப்பட்டிருந்தது தொடர்பாக பெரும் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், இது தொடர்பாக திமுக தரப்பு மலிவான அரசியல் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த மருந்து கவர்கள் தற்போதைய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்றும், இதற்கு முந்தைய ஆட்சிக்காலத்திலேயே இவை அறிமுகப்படுத்தப்பட்டவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் விவரிக்கும்போது, கரூர் அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருந்து கவர்கள் வழக்கமாக மத்திய சிறைச் சாலை மூலமாகவே பெறப்பட்டு வந்தன. அதில் காலை, மதியம், இரவு என மருந்துகளை உட்கொள்ளும் வழிமுறைகள் தமிழில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தன. இருப்பினும், கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட கவர்கள் தட்டுப்பாடு காரணமாக, ஈரோடு மாவட்ட அச்சுத் தொழில் கூட்டுறவுச் சங்கத்திடம் நான்கு லட்சம் கவர்கள் அச்சிட ஆர்டர் செய்யப்பட்டது. அந்த கவர்கள் கடந்த 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. அக்காலகட்டத்தில் திமுக ஆட்சியில் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
கோயம்புத்தூர் மருத்துவமனை விவகாரத்தைப் பொறுத்தவரை, சிந்தாமணி கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அப்போதைய திமுக அரசு இந்தி சொற்கள் இடம்பெறுவதற்கு அனுமதி அளித்ததுடன், அந்த வடிவமைப்புக்கும் ஒப்புதல் அளித்தது. இப்போது இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தவுடன், தங்களின் தவறுகளை மூடிமறைக்க தற்போதைய ஆட்சி மீது திமுக பழி சுமத்துவதாக கே.ஜி. அருண்ராஜ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிர்வாகம் முந்தைய அரசு உருவாக்கிய வடிவமைப்பு அல்லது மொழி நடைமுறைகளில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
இந்த அரசியல் சர்ச்சையைத் தொடர்ந்து, கரூர் மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைகளில் இந்தி எழுத்துக்கள் கொண்ட சர்ச்சைக்குரிய மருந்து கவர்கள் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் மருத்துவமனையில் மீண்டும் பழைய நடைமுறைப்படி தமிழ் மொழியில் மட்டும் அச்சிடப்பட்ட கவர்கள் வழங்கப்படத் தொடங்கியுள்ளன. கோயம்புத்தூரைப் பொறுத்தவரை, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் வழிமுறைகளைக் கொண்ட புதிய கவர்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.









