எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி: முதலமைச்சர் விஜய் மீது திமுக பரபரப்பு புகார்

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மீது திமுக சட்டப்பிரிவு செயலாளர் பரந்தாமன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திமுகவின் சட்டப் பிரிவு இணைச் செயலாளரும், மதுராந்தகம் தொகுதி வேட்பாளருமான ஐ.பரந்தாமன், தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் (DVAC) முறைப்படி புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜயை முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சதித் திட்டத்தில் டி.வி.கே தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் கூட்டாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, ஜூன் 16-ஆம் தேதி வைகோவுடன் நடந்த சந்திப்பின்போது, ஆதவ் அர்ஜுனா இந்த விலைக்கு வாங்கும் திட்டத்தை முன்மொழிந்ததாக பரந்தாமன் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் கூறுவதை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொண்டு சேர்க்க, அதை வைகோ முன்னெடுத்துச் சென்று எம்.எல்.ஏ.க்களிடம் பேசியதாக பரந்தாமன் விளக்கினார். எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி ஆசை காட்டியதாகவும், ஆனால் அதை அவர்கள் உறுதியாக நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, தேவையில்லாத இடைத்தேர்தல்களை உருவாக்கி, தங்கள் பலத்தை சட்டமன்றத்தில் அதிகரிக்கவே அரசு முயல்வதாக அவர் கடுமையாகச் சாடினார்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் சி.ஜோசப் விஜயின் அரசு, நடைமுறையில் ஊழல் நிறைந்த நிர்வாகத்தையே நடத்துவதாக பரந்தாமன் விமர்சித்தார். முதலமைச்சரின் நாற்காலியே ஊழல் கால்களால் தாங்கப்பட்டிருக்கிறது என்று அவர் காட்டமான கருத்தைத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக இந்த புகாரைப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கையாக உள்ளது என்று அவர் கூறினார்.









