ஃபோர்ஷோர் எஸ்டேட் புதிய தலைமைச் செயலகத் திட்டம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

சென்னை ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் அரசின் முடிவுக்கு எதிராக திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலக வளாகத்தை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 8, 2026 அன்று சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் 20 லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் இந்தத் திட்டத்திற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-2 (CRZ-II) வரம்பிற்குள் வருவதால், இது அந்தப் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கும் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, ஒலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் முட்டையிடும் முக்கியப் பகுதியாக இப்பகுதி திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இங்கு ஆமைகள் முட்டையிடுகின்றன. இது போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் கடல் வாழ் உயிரினங்களுக்கும், அங்கு வாழும் சுமார் 1,500 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் ஸ்ரீனிவாசபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான 1,356 குடியிருப்புகள் மற்றும் 2,000 குடிசைகள் என மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, இப்பகுதியைக் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் சிக்கல்களும் உருவாகும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். எந்தவொரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வும் அல்லது போக்குவரத்து பாதிப்பு ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத்துறை, சென்னை போக்குவரத்து காவல்துறை அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றிடம் எந்தவிதமான முன் அனுமதியோ அல்லது பரிந்துரைகளோ பெறப்படவில்லை என்றும் மனுதாரர் வாதிட்டுள்ளார். சி.ஆர்.இசட் அறிவிக்கை 2011-ன் படி, 20,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட கட்டுமானங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ன் கீழ் அனுமதி பெறுவது அவசியம் என்பதையும், அதற்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை மிக முக்கியமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாற்று இடங்களைக் கண்டறிதல், நில பயன்பாடு, வாகன நிறுத்துமிடம் மற்றும் தெருவோர வணிகம் குறித்த எந்தவொரு ஆழமான ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.









