அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த அவதூறு வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் மனு

திமுகவின் சமூக ஊடகப் பதிவுகளுக்கு தான்தான் பொறுப்பு என்று கூற முடியாது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து, நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிவிடும் ஒவ்வொரு கருத்துக்கும் தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆதவ் அர்ஜுனாவை ஜான் பிரிட்டோ என்பவருடன் தொடர்புபடுத்தி பதிவிடப்பட்ட கருத்துகளால் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தொடர்ந்த வழக்கை ஸ்டாலின் கடுமையாக எதிர்த்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜான் பிரிட்டோவை அமைச்சருடன் தொடர்புபடுத்தி திமுகவின் ஐடி விங் பதிவிட்ட விவகாரத்தில், தனது கட்சித் தலைவராகிய தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற வாதம் அடிப்படையற்றது என்றும், தனி நபர்களின் செயல்களுக்குத் தான் சட்டப்பூர்வமாகப் பொறுப்பாக முடியாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருவதையும், அவர்கள் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், அவர் நீதிமன்றத்திற்குச் சுத்தமான கைகளுடன் வரவில்லை என்று விமர்சித்துள்ளார். கரூர் ஸ்டாம்பீட் வழக்கு உட்பட பல விவகாரங்களில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருவதையும் அவர் தனது மனுவில் பதிவு செய்துள்ளார். அமைச்சர் தானாகவே ஒரு 'தூய்மையானவர்' எனச் சித்தரித்துக்கொள்வது கேலிக்கூத்தானது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேர்தல் காலங்களில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தன்னைப்பற்றியும், தனது குடும்பத்தினர் குறித்தும் கடுமையான மற்றும் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அவரது பொதுப் பேச்சுகளே அவரது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஜான் பிரிட்டோ தனது உறவினர் என்பதை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எங்கேயும் மறுக்கவில்லை என்பதால், இந்த வழக்கு சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. திமுகவின் தலைவர் என்ற ஒரே காரணத்திற்காக, கட்சியின் ஒவ்வொரு பிரிவு செய்யும் சமூக வலைதளப் பதிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று என்று அவர் தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.









