அமைச்சர் ராஜமோகன் மீதான லஞ்சப் புகார்: ஆளுநரிடம் முறையிட்ட திமுக சட்டப்பிரிவு

பதவிக்காக 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ஏ. ராஜமோகன் கூறிய விவகாரத்தில், சுயேச்சையான விசாரணை நடத்தக்கோரி ஆளுநரிடம் திமுக மனு அளித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன், அரசுப் பதவி ஒன்றிற்காக தனக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக பொதுவெளியில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முறையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ. பரந்தாமன், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் முறையான மனுவை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த நவம்பர் 1-ம் தேதி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழக தின விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜமோகன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை வழங்கக் கோரி தனக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். மேலும், இந்த லஞ்சப் பேரம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஏ. மணி மூலமாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த புகாரை வெறும் பேச்சாகக் கடந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள பரந்தாமன், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ஏ-ன் கீழ் விசாரணையைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதியைப் பெற, இந்த விவகாரத்தை உரிய அதிகார அமைப்பின் முன் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே கடந்த நவம்பர் 2-ம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் (DVAC) புகார் அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தான் அளித்துள்ள மனுவில், லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 12, அத்துடன் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 45, 46, 49 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சு அடங்கிய அசல் காணொளி ஆதாரங்கள் மற்றும் பிற ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த விசாரணையில் அமைச்சர் ராஜமோகன் தலையீடு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.









