FCRA சட்டத் திருத்த மசோதா: கூடுதல் அவகாசம் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்கக் கோரி திமுக எம்பி கடிதம்

FCRA சட்டத் திருத்த மசோதா குறித்த கருத்துகளைத் தெரிவிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 4 வாரங்களாக உயர்த்த வேண்டும் என திமுக எம்பி பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம், திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த மசோதா குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களவை செயலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அந்த அறிவிப்பில் வெறும் கருத்துக்களைப் பரிந்துரைகளாக மட்டுமே கேட்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவரான சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பி. வில்சன் இந்த மசோதாவால் பாதிக்கப்படக்கூடியவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், சட்டத்தின் பிரிவுகள் மீது தங்களுக்குள்ள ஆட்சேபனைகளை வெளிப்படையாகப் பதிவு செய்யவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பெரும்பாலான அரசு சார்ந்த மசோதாக்களில் ஆலோசனைகளை மட்டும் வரவேற்பது மரபாக இருந்தாலும், இச்சட்டம் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மத அமைப்புகளை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், ஆட்சேபனைகளைக் கேட்பது அவசியமான ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இச்சட்ட மசோதா தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க வழங்கப்பட்டுள்ள ஏழு நாட்கள் என்ற கால அவகாசம் மிகவும் குறைவானது என்று தனது அதிருப்தியை அவர் பதிவு செய்துள்ளார். இவ்வளவு குறுகிய காலத்தில், சட்டரீதியான ஆலோசனைகளைத் திரட்டி விரிவான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த கால வரம்பை குறைந்தது நான்கு வாரங்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மசோதாவில் உள்ள ஒவ்வொரு பிரிவையும் கவனமாகப் படித்து, உள்நாட்டில் கலந்தாலோசித்து, முறையான விளக்கத்தைச் சமர்ப்பிக்க கால அவகாசம் மிக முக்கியம் என்று பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை எதிர்ப்பவர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் உதவும் என்பதால், ஜனநாயக ரீதியாக இந்த கோரிக்கையை கூட்டுக்குழு பரிசீலிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெறும் சூழலில், திமுக எம்பியின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.









