துலீப் கோப்பை தொடக்கம்: ஈஸ்ட் ஜோன் அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்த சபாஷ் அகமது - சுதீப் கராமி

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் நாளில் சபாஷ் அகமது மற்றும் சுதீப் கராமி அபார சதமடித்து ஈஸ்ட் ஜோன் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் உயர்மட்ட பயிற்சி மையத்தில் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது பலரது எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஈஸ்ட் ஜோன் அணி 138 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த சபாஷ் அகமது மற்றும் சுதீப் கராமி ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சுதீப் கராமி மற்றும் சபாஷ் அகமது இருவரும் இணைந்து 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதீப் கராமி, பிஃரோயியம் ஜோடின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்ட் ஜோன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்களைக் குவித்துள்ளது. சபாஷ் அகமது 137 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்களுடன் களத்தில் உள்ளார். வடகிழக்கு மண்டல அணி சார்பில் பிஃரோயியம் ஜோடின் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மற்றொரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் ஜோன் மற்றும் நார்த் ஜோன் அணிகள் மோதின. இதில் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு தனது திறமையை நிரூபிக்கும் வகையில் தனுஷ் கோடியன் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். 20.5 ஓவர்கள் பந்துவீசிய அவர் 72 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்குத் துணையாக துஷார் தேஷ்பாண்டேவும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, நார்த் ஜோன் அணி தனது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நார்த் ஜோன் அணியில் ஆயுஷ் பதோனி 51 ரன்களும், அன்ஷுல் கம்போஜ் அதிரடியாக 60 ரன்களும் எடுத்தனர்.
நார்த் ஜோன் அணியின் இன்னிங்ஸிற்குப் பிறகு பேட்டிங் செய்யத் தொடங்கிய வெஸ்ட் ஜோன் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பிரித்வி ஷா மற்றும் ஹார்விக் தேசாய் ஆகிய தொடக்க வீரர்கள் இருவரும் வெறும் 31 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் ஜோன் அணி தடுமாற்றமான நிலையில் உள்ளது. உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கும் இளம் மற்றும் அனுபவமிக்க வீரர்களின் இந்த மோதல், இந்திய அணியின் எதிர்காலத் தேர்வுக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









