துரந்த் கோப்பை கால்பந்து: எஃப்சி1 அணியை வீழ்த்தி கம்பீரமாக மீண்டது போடோலேண்ட் எஃப்சி

துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் எஃப்சி1 அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போடோலேண்ட் எஃப்சி அபார வெற்றி பெற்றது.
துரந்த் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் எஃப் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், போடோலேண்ட் எஃப்சி அணி எஃப்சி1 அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 0-6 என்ற கோல் கணக்கில் பெரும் தோல்வியைச் சந்தித்த போடோலேண்ட் அணி, இந்த ஆட்டத்தில் தனது தவறுகளைச் சரிசெய்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி, தொடரின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. எஃப்சி1 அணியின் கேப்டன் இக்லாக் ஃபயாஸ், போடோலேண்ட் அணியின் கேப்டன் ஹலிச்சரன் நார்சரியிடம் ஒரு மரக்கன்றை வழங்கினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வையும் வலியுறுத்தும் இந்த முயற்சி, துரந்த் கோப்பை தொடரின் ஒரு அங்கமாக மாறியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இத்தகைய முன்னெடுப்புகள் விளையாட்டில் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்தன.
ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில், இரண்டாவது பாதியில் போடோலேண்ட் அணி அதிரடியைக் காட்டியது. ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் ஹலிச்சரன் நார்சரியின் பாஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ராபின்சன் ரெண்டன், தலையால் முட்டி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மாற்று வீரர்கள் ரிதுராஜ் மோகன் 78-வது நிமிடத்திலும், ஆரோன் தாபா 82-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். தலைமை பயிற்சியாளர் விகாஷ் பந்தியின் வியூகங்களும், வீரர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் எஃப் பிரிவில் புள்ளிகள் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளில் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ள போடோலேண்ட் மற்றும் எஃப்சி1 ஆகிய அணிகள் கடுமையான போட்டியில் உள்ளன. மற்றொரு சுவாரஸ்யமான ஆட்டத்தில் லாங்ஸ்னிங் எஃப்சி மற்றும் நோங்சே எஸ்எஸ் அண்ட் சிசி அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. முதல் பாதியில் பின்தங்கியிருந்த லாங்ஸ்னிங் எஃப்சி அணி, இரண்டாவது பாதியில் அபாரமாக விளையாடி புள்ளியைப் பகிர்ந்து கொண்டது.









