பரம்பிக்குளம் ஆழியாறு பாசனக் கால்வாய்களைத் தூர்வார தேர்தல் ஆணையம் அனுமதி: விவசாயிகள் நிம்மதி

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டக் கால்வாய்களைத் தூர்வார இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் (PAP) கீழ் வரும் கால்வாய்களைத் தூர்வாருவதற்கான நிர்வாக அனுமதி வழங்க தமிழ்நாடு அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான தடையில்லாச் சான்றிதழை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. மாநிலத் தேர்தல் அதிகாரிக்கு இது குறித்த கடிதத்தையும் தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணை மூலம் சுமார் 3,77,152 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதிகள் நான்கு பாசன மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜூலை மாதத்தில் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் 15-க்குள் இரண்டாம் மண்டலத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஜனவரி மாதத்தில் மூன்றாம் மண்டலத்திற்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இருப்பினும், கடந்த மூன்று மாதங்களாகப் புதிய அரசு பொறுப்பேற்றிருந்த போதிலும், நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இப்பணிகள் தொய்வடைந்தன.
விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது கால்வாய்களைத் தூர்வாருவதற்காக 14.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. எனினும், அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட சூழலில், இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால் நிர்வாக ரீதியான அனுமதியைப் பெறுவதில் சிக்கல்கள் எழுந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், அரசின் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையத்தின் தலையீடு அவசியமானது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தேர்தல் ஆணையத்திடம் தூர்வாரும் பணிகளுக்கான தடையில்லாச் சான்றிதழ் வேண்டி கடிதம் சமர்ப்பித்தது. அரசின் இந்த அவசரத் தேவையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், தற்போது அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் நீண்டகாலமாகத் தூர்வாரும் பணிகளுக்காகக் காத்திருந்த திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசின் நிர்வாக நடவடிக்கைகள் விரைவில் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.









