தேர்தல் செலவு கணக்கு குளறுபடி: முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தடை

தேர்தல் செலவு கணக்கை சரியாக தாக்கல் செய்யாத காரணத்தால் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜே.எம்.எச். ஹசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் செலவு கணக்குகளைச் சரியாகத் தாக்கல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 10ஏ-ன் கீழ், கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
தேர்தல் ஆணையத்தின் ஆய்வில், ஹசன் மௌலானா தனது தேர்தல் செலவாக 17 லட்சத்து 3 ஆயிரத்து 548 ரூபாயை மட்டுமே தாக்கல் செய்திருந்தது தெரியவந்தது. இருப்பினும், சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் மேற்கொண்ட விசாரணையில், அவர் போட்டியிட்ட போது 10-க்கும் மேற்பட்ட நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாகவும், அதற்கு 32 லட்சத்து 5 ஆயிரத்து 915 ரூபாய் செலவிடப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இந்தத் தொகையை அவர் தனது செலவு கணக்கில் சேர்க்கவில்லை. இந்த கூடுதல் தொகையையும் சேர்த்தால், அவரது மொத்த செலவு 49 லட்சத்து 9 ஆயிரத்து 463 ரூபாயாக உயர்கிறது. இது அந்த காலகட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட 30.8 லட்சம் ரூபாய் என்ற உச்ச வரம்பை விட மிக அதிகம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்களில் தனது பெயர், புகைப்படம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சின்னம் இடம் பெற்றிருந்தாலும், அவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் வெளியிடப்பட்டவை என்று ஹசன் மௌலானா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தமிழ்நாடு வருகையின் போது, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் நோக்கில் அந்த விளம்பரங்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்குத் தான் அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்குழு இந்த விளம்பரங்கள் குறிப்பாக ஹசன் மௌலானாவின் வெற்றிக்காகவே முன்னிறுத்தப்பட்டவை என்று உறுதிப்படுத்தியது.
இந்த உத்தரவைச் சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகக் கூறியுள்ள ஹசன் மௌலானா, தேர்தல் செலவு குறித்த வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், ஐந்து ஆண்டுகள் கழித்து இப்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை இலக்கு வைத்து மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஹசன் மௌலானா தனது 2021-26 வரையிலான பதவிக்காலத்தை முடித்துவிட்ட நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









