ரூ.100 கோடி பள்ளி அங்கீகார முறைகேடு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது அமலாக்கத்துறை விசாரணை

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிச் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பி.டி. அரசகுமார் ஆகியோர் மீது அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (CCB) பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கானது, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் உருவானது. அரசகுமார் என்பவர் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி, பள்ளிகளின் நிர்வாகிகளிடம் நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி (DTCP) ஒப்புதல்கள் மற்றும் இதர அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி எந்த அனுமதிகளையும் பெற்றுத் தராமல், பணத்தையும் திருப்பி வழங்காமல் ஏமாற்றியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் 27 ஆம் தேதி அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து ஜூலை 14 ஆம் தேதி அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், செப்டம்பர் 16 ஆம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் உரிய காலத்தில் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்காததால், சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அரசகுமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் விசாரணைக்காக அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, தென்ணூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முத்துகுமார் என்பவருடன் தொடர்புடைய இடங்களிலும் கள்ளக்குறிச்சியில் சோதனைகள் நடைபெற்றன. தற்போதைய நிலையில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர்கள் மீதான முந்தைய ஊழல் தடுப்பு வழக்குகள் தொடர்பான கோப்புகள் ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன.









