ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: விவசாய தொழிலாளி கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் விவசாய தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். கணவரை இழந்த அந்த மூதாட்டியின் பிள்ளைகள் வேறு இடங்களில் வசித்து வரும் நிலையில், அவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சூழலில், அந்த மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்தில் கடந்த ஐந்து நாட்களாக கரும்பு அறுவடை பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த விஜி (31) உள்ளிட்ட தொழிலாளர்கள் அந்த பகுதியில் தங்கி பணியாற்றி வந்தனர்.
கரும்பு அறுவடை பணிகளில் ஈடுபட்டு வந்த விஜி, அந்த மூதாட்டியிடம் அடிக்கடி சகஜமாக பேசி வந்துள்ளார். இந்த பழக்கத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர், கடந்த சனிக்கிழமை இரவு மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது மூதாட்டியை தாக்கி, வாய் மற்றும் உடல் பகுதியை வலுக்கட்டாயமாக மூடி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மூதாட்டி சத்தம் போட முடியாதவாறு தடுத்த அந்த நபர், சம்பவத்தை நிகழ்த்திய பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மூதாட்டி இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அந்தியூர் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில், கரும்பு அறுவடை தொழிலாளியான விஜி, திருமணமானவர் என்பதும், தனது மனைவியைப் பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பதுங்கியிருந்த விஜி-யை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.









