ஈரோடு பண்ணையில் அதிரடி சோதனை: லார் கிப்பன் குரங்குகள் மற்றும் அரிய வகை வனவிலங்குகள் பறிமுதல்

ஈரோட்டில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட லார் கிப்பன் குரங்குகள் மற்றும் ஆப்பிரிக்க செர்வல் பூனைகள் உள்ளிட்ட 11 வனவிலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பண்ணையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த அரிய வகை வெளிநாட்டு வனவிலங்குகளை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த பண்ணையின் உரிமையாளரான எஸ்.கே. கேசவநாதன் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளில் ஏழு ஆப்பிரிக்க செர்வல் பூனைகள், இரண்டு லார் கிப்பன் குரங்குகள் மற்றும் இரண்டு டஃப்டட் கபுச்சின் குரங்குகள் ஆகியவை அடங்கும். தற்போது இந்த விலங்குகள் அதே பண்ணையில் வனத்துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்த விசாரணை, நடிகர் விக்ரம் ஒரு லார் கிப்பன் குரங்கைத் தழுவி இருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தீவிரமடைந்தது. அந்த குரங்குகளை ஈரோட்டைச் சேர்ந்த கேசவநாதன் என்பவர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனிடம் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பண்ணையில் ஆய்வு மேற்கொண்டபோது, அரிய வகை பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட பல விலங்குகள் சட்டவிரோதமாகப் பராமரிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்த அரிய வகை உயிரினங்களை வைத்திருப்பதற்கும், பரிமாற்றம் செய்வதற்கும் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், கேசவநாதன் போதிய ஆவணங்கள் இன்றி இந்த விலங்குகளை வைத்திருந்ததுடன், சட்டவிரோத இனப்பெருக்கத்திலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லார் கிப்பன் வகை குரங்குகள் சர்வதேச அளவில் அதிக பாதுகாப்பு கொண்ட சிஐடிஇஎஸ் (CITES) பட்டியலில் உள்ளதால், இவை மீதான விதிமீறல்கள் கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இக்குற்றத்திற்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வனத்துறை அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணையின் போது, கேசவநாதன் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த விலங்குகளை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட வனவிலங்கு காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்வது குறித்து நீதிமன்றத்தின் உத்தரவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாகத் துறை சார்ந்த உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலங்குகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன மற்றும் சட்டவிரோத பரிமாற்றச் சங்கிலியில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.









