ஈரோடு: உரிய அனுமதியின்றி வெளிநாட்டு விலங்குகளை வளர்த்தவர் மீது வனத்துறை அதிரடி நடவடிக்கை

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டு வகை விலங்குகளை வளர்த்ததாக வர்த்தகர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு பகுதியைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதன் என்ற வெளிநாட்டு விலங்குகள் வர்த்தகர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டு வகை விலங்குகளை வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் கடத்துதல் ஆகிய விதிமீறல்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனத்துறையின் திடீர் ஆய்வின் போது, இவரது பண்ணையில் லார் கிப்பன் மற்றும் ஆப்பிரிக்க செர்வல் பூனைகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 49எம்(8)-இன் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, நான்காவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள விலங்குகளை முறையாக மத்திய அரசு மற்றும் வனத்துறையின் அனுமதியின்றி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விலங்குகள் பறிமுதல் செய்யப்படும் என்றும், பிரிவு 51-இன் கீழ் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கேசவநாதன் இந்த விலங்குகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், அவற்றை எங்கே பராமரிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மீட்கப்படும் விலங்குகளைப் பராமரிக்கப் போதுமான இடவசதி இல்லை என்று ஈரோடு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் லார் கிப்பன் வகை குரங்குகளைப் பராமரிக்கக் காலி இடம் இருப்பதாகவும், அங்குள்ள பூங்கா அதிகாரிகள் அவற்றை ஏற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த கிப்பன் ஒன்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்ததால், அந்த இடத்தில் தற்போது லார் கிப்பன் ஜோடியைப் பராமரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் செர்வல் பூனைகளை மீட்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
விசாரணையின் போது, மணிப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட லார் கிப்பன்களுக்குப் போதிய ஆவணங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விலங்குகளைத் தமிழ்நாட்டிற்கு மாற்றிய பின், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை முறையாகப் பின்பற்றப்படவில்லை. அதேபோல், பண்ணையில் இருந்த ஏழு ஆப்பிரிக்க செர்வல் பூனைகளில், ஒன்றுக்கு மட்டுமே ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதற்கான முறையான ஆவணங்கள் உள்ளன. எஞ்சிய ஆறு பூனைகளில் மூன்றை கேரளாவில் இருந்து ஆவணங்கள் இன்றி கொண்டு வந்துள்ளதும், மூன்று குட்டிகள் பண்ணையிலேயே பிறந்ததை மறைத்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.









