ஈரோடு: பொதுமக்களிடம் தப்பிக்க காவல்துறையை உதவியாக அழைத்த வினோத திருடன் கைது

ஈரோடு அருகே கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிக்க முயன்ற திருடன், பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க தானே காவல்துறையினரை அழைத்து சரணடைந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு அருகே உள்ள கஞ்சிக்கோயில் பகுதியில், வீடுபுகுந்து கொள்ளையடித்த நபர் ஒருவர் பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க, தானே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து காவல்துறையினரை வரவழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத சம்பவம் குறித்த விரிவான விவரங்கள் வருமாறு, கஞ்சிக்கோயில் அருகே உள்ள எம்.புதுப்பாளையம், சிவசக்தி அவென்யூ பகுதியில் வசித்து வருபவர்கள் சிவகுமார் மற்றும் ஷர்மிளாதேவி தம்பதியினர். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இரவு இவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர்.
இரவு சுமார் 10.45 மணியளவில் வீடு திரும்பிய தம்பதியினர், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதையும், முதல் தளத்தில் விளக்கு எரிவதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் யாரோ புகுந்திருப்பதை உணர்ந்த ஷர்மிளாதேவி சத்தமிட்டு உதவி கோரினார். அந்த சமயத்தில், வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த நபர், அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேகமாகத் தப்பிக்க முயன்றார். ஷர்மிளாதேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், அந்த வழியாகச் சென்றவர்களும் திருடனைத் துரத்தத் தொடங்கினர்.
தன்னைப் பொதுமக்கள் சுற்றி வளைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில், அந்த நபர் தப்பிக்கும் வழியின்றி செய்வதறியாது திகைத்தார். இறுதியில் வேறு வழியின்றி, அவரே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (100) அழைத்து, தான் சிக்கியிருக்கும் இடத்தைச் சொல்லி காவல்துறையினரின் உதவியை நாடினார். உடனடியாக அங்கு விரைந்து வந்த கஞ்சிக்கோயில் காவல்துறையினர், பொதுமக்களிடம் சிக்காமல் இருந்த அந்த நபரைப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் ராஜாப்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் (35) என்பதும், தற்போது சேலத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.
வீட்டைச் சோதனையிட்டதில், 11 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு வெள்ளி நாணயம் திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் விஜயகுமார், சம்பவத்தன்று கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பூட்டியிருந்த வீட்டைப் பார்த்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. திருடப்பட்ட நகைகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன. இதுபோன்று வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









