போலி சாதிச் சான்றிதழ் விவகாரம்: எந்த நிலையிலும் விசாரணை நடத்தலாம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

அரசு ஊழியர்களின் சாதிச் சான்றிதழை எந்தக் காலகட்டத்திலும் சரிபார்க்க சட்டப்பூர்வத் தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசுப் பணியில் உள்ள ஊழியர்களின் சாதிச் சான்றிதழ் உண்மையானதா என்பதை எந்தக் காலகட்டத்திலும் சரிபார்க்க சட்டப்பூர்வத் தடைகள் ஏதுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 1995-ஆம் ஆண்டுக்கு முன்பாகப் பெறப்பட்ட சான்றிதழாக இருந்தாலும், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தவறான சான்றிதழ் மூலம் அரசுப் பணி மற்றும் சலுகைகளைப் பெறுவது அரசியல் சாசன மோசடியாகவே கருதப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த வழக்கு சென்னை துறைமுக அறக்கட்டளையில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ். ஜெகநாதன் என்பவருடன் தொடர்புடையதாகும். தான் இந்து உரளி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி அவர் பணிபுரிந்து வந்த நிலையில், மாநில அளவிலான சரிபார்ப்புக் குழு மேற்கொண்ட ஆய்வில், அவர் உரளி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அந்தச் சமூகம் பழங்குடியின பட்டியலில் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி வழங்கிய உத்தரவில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, போலி சாதிச் சான்றிதழ் மூலம் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவது ஒரு அரசியல் சாசன மோசடி என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற மோசடிகளுக்குத் தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி ஆதரவாக இருக்க முடியாது எனவும், நிர்வாக ரீதியாக எப்போது வேண்டுமானாலும் சான்றிதழ்களை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடமுண்டு எனவும் அவர் விளக்கியுள்ளார்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட முன்னாள் ஊழியரின் ஓய்வுக்காலப் பலன்களை விடுவிக்கக் கோரிய மனுவை நீதிபதி நிராகரித்தார். மேலும், இந்த விவகாரத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடருமாறு சென்னை துறைமுக அறக்கட்டளை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களைக் கொண்டு அரசுப் பணியில் நீடிப்பவர்களுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, நிர்வாகத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.









