தமிழகத்தில் மூன்று முக்கிய சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வருகிறது தடையில்லா தானியங்கி கட்டண வசூல் முறை

சென்னை அருகே உள்ள மூன்று சுங்கச்சாவடிகளில் அக்டோபர் முதல் வாகனங்கள் நிற்காமல் செல்லும் வகையில் தடையில்லா தானியங்கி சுங்க வசூல் முறை அறிமுகமாகிறது.
தமிழகத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மூன்று முக்கிய சுங்கச்சாவடிகளில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து புதிய தடையில்லா தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை - திருச்சி மற்றும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பரனூர், நெமிலி மற்றும் செஞ்சசமுத்திரம் ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த நவீன தொழில்நுட்பம் அமல்படுத்தப்படவுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கான முன்னோட்ட சோதனைகளைத் தற்பொழுது தொடங்கியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்டேக் (FASTag) முறையில் வாகனங்கள் சுங்கச்சாவடி அருகே வேகம் குறைத்து அல்லது முழுமையாக நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த புதிய மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) முறையின் கீழ், வாகனங்கள் நிறுத்தப்படாமல் அதிவேகத்தில் சென்றாலும் சுங்கக் கட்டணம் தானாகவே கழிக்கப்படும். இதற்காகச் சுங்கச்சாவடிகளுக்கு 100 மீட்டர் முன்பாகவே சாலைகளின் குறுக்கே பிரம்மாண்டமான இரும்பு கட்டமைப்புகள் (Gantries) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தானியங்கி வாகன எண் கண்டறியும் கேமராக்கள் (ANPR) மற்றும் உணர் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த தானியங்கி கேமராக்கள் சுமார் 5.5 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை மணிக்கு 150 கி.மீ வேகத்தில் செல்லும் வாகனங்களின் எண்களைக் கூட துல்லியமாகப் படம்பிடிக்கும் திறன் கொண்டவை. சுமார் 40 மீட்டர் தொலைவில் இருந்தே வீடியோ காட்சிகளைப் பதிவு செய்யும் வசதி கொண்ட இந்த கேமராக்கள், 300 மீட்டர் தொலைவுக்கு முன்பே வாகனங்களை அடையாளம் காணும். நெடுஞ்சாலைகளின் முக்கியப் பாதைகள் மட்டுமின்றி, சேவைச் சாலைகள் மற்றும் நுழையும் இடங்களிலும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, முழுமையான வாகனப் போக்குவரத்து கண்காணிக்கப்படும்.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் 10 முதல் 15 நிமிட காத்திருப்பு நேரம் முற்றிலும் தவிர்க்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாகத் பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கடும் நெரிசலைக் குறைக்க இது பெரிதும் உதவும். வாகன எண் மற்றும் அதன் வகையைத் துல்லியமாக அடையாளம் காணும் பொருட்டு, மாநிலப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து வாகனத் தரவுகளை இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒருவேளை வாகன எண்ணைக் கண்டறிவதில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால், அபராதச் சீட்டு வாகன உரிமையாளரின் முகவரிக்கு நேரடியாக அனுப்பப்படும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், நாட்டின் பிற பகுதிகளிலும் இத்தகைய தடையில்லா சுங்க வசூல் முறை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









