சென்னையில் சோகம்: கிணற்றைச் சுத்தம் செய்ய இறங்கிய தந்தை, மகன் நச்சுவாயு தாக்கி பலி

சென்னையில் கிணற்றைச் சுத்தம் செய்யும்போது நச்சுவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை சவுகார்பேட்டை அருகே உள்ள எலிஃபென்ட் கேட் பகுதியில் கிணற்றைச் சுத்தம் செய்ய இறங்கிய தந்தை மற்றும் மகன் நச்சுவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (64) மற்றும் அவரது மகன் ஆர்.அய்யனார் (35) ஆகியோர் கொடுங்கையூரில் வசித்து வந்தனர். இவர்கள் பிளம்பிங் மற்றும் கிணறு சுத்தம் செய்யும் பணிகளைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.
சம்பவம் நடந்த புதன்கிழமை அன்று, அந்தப் பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பவரது வீட்டில் இருந்த 45 அடி ஆழமுள்ள கிணற்றைச் சுத்தம் செய்வதற்காக ரவியும் அவரது மகன் அய்யனாரும் சென்றனர். பிரசாந்த் என்பவர் ஒரு பிளம்பர் மூலம் இவர்களைத் தொடர்பு கொண்டு கிணற்றைத் தூர்வாரும் பணிக்காக அழைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளைத் தொடங்குவதற்காக முதலில் தந்தை ரவி கயிற்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். சிறிது நேரத்திலேயே, உள்ளே இருந்த நச்சுவாயுவைச் சுவாசித்த ரவி மயக்கமடைந்து கீழே சரிந்துள்ளார்.
தந்தையின் நிலை குறித்து தெரியாத மகன் அய்யனார், நீண்ட நேரமாகியும் தந்தை வெளியே வராததால் அவரை அழைத்துள்ளார். எவ்வித பதிலும் கிடைக்காததால், அச்சத்துடனும் பதற்றத்துடனும் அய்யனாரும் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அவரும் கிணற்றுக்குள் இருந்த நச்சுவாயுவின் தாக்கத்திற்கு உள்ளாகி மயங்கி விழுந்தார். கிணற்றுக்குள் இருவரும் அசைவற்று இருப்பதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கும் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகப் போராடி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கிய மீட்புக் குழுவினர், தந்தை மற்றும் மகனை மீட்டு உடனடியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எலிஃபென்ட் கேட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அலட்சியம் காரணமாக மரணம் நிகழ்ந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.









