சீனாவில் திரையிடப்பட்ட முதல் கன்னடப் படம்: சங்கராபரணம் சர்வதேச அளவில் கவனம் ஈர்ப்பு

சுமந்த் பட் இயக்கத்தில் ஷைன் ஷெட்டி நடித்துள்ள 'சங்கராபரணம்' திரைப்படம் சீனாவில் நடைபெற்ற கோல்டன் ரூஸ்டர் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் சுமந்த் பட் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கராபரணம்' திரைப்படம், சர்வதேச அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சீனாவில் நடைபெற்ற புகழ்பெற்ற 39-வது கோல்டன் ரூஸ்டர் மற்றும் ஹண்ட்ரட் பிளவர்ஸ் திரைப்பட விழாவில் (China Film Golden Rooster and Hundred Flowers Film Festival) இந்தப் படம் உலக அளவில் முதல்முறையாக திரையிடப்பட்டது. கன்னடத் திரையுலக வரலாற்றிலேயே, இந்த சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகி திரையிடப்பட்ட முதல் கன்னடத் திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி படமான 'ரைட்' மற்றும் தமிழின் 'மகாராஜா' போன்ற இந்தியத் திரைப்படங்களின் வரிசையில், 'சங்கராபரணம்' தற்போது இடம்பிடித்துள்ளது. கன்னட மொழியில் படமாக்கப்பட்டு, ஆங்கில மொழிபெயர்ப்புடன் திரையிடப்பட்ட இந்தப் படம், அங்குள்ள உலகளாவிய திரை ஆர்வலர்கள் மற்றும் நடுவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்பட விழாவின் சர்வதேச அரங்கில் படத்தின் குழுவினர் பங்கேற்று, பார்வையாளர்களின் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
கடலோர கர்நாடகாவின் கலாச்சார பின்னணியையும், தனது சொந்த அனுபவங்களையும் இணைத்து, ஷைன் ஷெட்டி இந்தத் திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ரங்கஸ்தலா ஸ்டுடியோவின் (Rangasthala Studio) மூலம் திவாகர் ஷெட்டியுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இது கன்னடத் திரையுலகம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தாண்டி, கிழக்கு ஆசிய நாடுகளிலும் தடம் பதிப்பதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.
இந்த திரில்லர் திரைப்படத்தில் மலையாளத் திரைப்படமான '2018' மூலம் அறியப்பட்ட தன்வி ராம் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். இவருடன் இணைந்து மூத்த நடிகர் சம்பத் ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். மேலும் கீர்த்தி அனுப் சீலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரண் ராஜின் பின்னணி இசையில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.









