ரூ.100 கோடி பள்ளி அங்கீகார முறைகேடு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குத் தொடர்பு என சென்னை போலீஸ் தகவல்

ரூ.100 கோடி பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொடர்பு இருப்பதாக சென்னை காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல்துறை சார்பில் மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பங்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் மூலம் இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளி நிர்வாகங்களின் கோரிக்கைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் அமைச்சருடனான செல்வாக்கைப் பயன்படுத்தி பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணம் 'கட்சி நிதி' என்ற பெயரில் திரட்டப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகம் எழுப்பியுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ஏ-வின் கீழ் உரிய அனுமதியைப் பெற்றுத்தான் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இதற்கான அனுமதி பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த வழக்கில் ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், தகுதியுள்ள அதிகாரியின் அனுமதி போதுமானது என்றும் வாதிட்டனர். மேலும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் அமைச்சராக இருந்ததால், அவரை நீக்கம் செய்யும் அதிகாரம் கொண்ட ஆளுநரிடம் தான் அனுமதி பெற வேண்டும் என மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை அரசு வழக்கறிஞர் நிராகரித்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் எழுப்பிய கேள்விகள் கவனத்தை ஈர்த்தன. ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரம் குறித்து தி.மு.க. சார்பில் முன்வைக்கப்படும் வாதங்களைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ஆளுநரின் அதிகாரத்தைப் பற்றி தி.மு.க. எப்போது பேசத் தொடங்கியது என்ற தொனியில் கருத்து தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறையும் பி.எம்.எல்.ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.









