ரூ. 1,020 கோடி அரசு ஒப்பந்த முறைகேடு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் 12 பேர் மீது ரூ. 1,020 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்த முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் நீர் வழங்கல் துறையின் கீழ் நடைபெற்ற அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சுமார் 1,020 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு ஒப்பந்ததாரர்களிடமிருந்து 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சப்பணம் 'கட்சி நிதி' என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆர்-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை (ED) கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்த 258 பக்க விரிவான அறிக்கையின் அடிப்படையில், மாநில அரசின் அனுமதியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாகக் கருதப்படும் கே.என்.நேரு, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அணுகி, அரசு ஒப்பந்தங்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக மாற்றியமைக்க செல்வாக்கு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது சகோதரர்களான கே.என்.மணிவண்ணன் மற்றும் என்.ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த முறைகேட்டிற்கான பணத்தை வசூலிப்பதிலும், அதனை முறையாகப் பகிர்ந்தளிப்பதிலும் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.சுதர்சனம் மற்றும் ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் ஒப்பந்த விவரங்களையும், லஞ்சப் பணப் பரிமாற்றம் குறித்த கணக்குகளையும் இடைத்தரகர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, ஒப்பந்தங்கள் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களைத் தேர்வு செய்யும் பணிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதும், அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் நடைபெற்ற ஒப்பந்தப் பணிகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக எஃப்.ஐ.ஆர்-இல் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தற்போது, இந்த ஆவணங்கள் அனைத்தும் சென்னை மாநகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









