dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழ்நாட்டில் முதியவர்களுக்கு வருமான வரம்பற்ற இலவச மருத்துவக் காப்பீடு: அரசு அதிரடி அறிவிப்பு

By Admin
18/08/2026
92 views
தமிழ்நாட்டில் முதியவர்களுக்கு வருமான வரம்பற்ற இலவச மருத்துவக் காப்பீடு: அரசு அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வருமான வரம்பின்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு, எவ்வித வருமான வரம்பும் இன்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவர்கள் மட்டுமே பயன்பெறும் சூழலில், புதிய திட்டமானது எந்தவித வருமான நிபந்தனையும் இன்றி அனைவருக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 38 லட்சம் முதியவர்கள் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், புற்றுநோய் சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் உயர் ரக நோயறிதல் பரிசோதனைகள் உள்ளிட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளை முதியவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அரசு மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் இந்தச் சிகிச்சை வசதிகளைப் பெறலாம். ஏற்கனவே இருக்கும் காப்பீட்டுத் திட்டத்தைப் போலவே, இதிலும் அறுவை சிகிச்சைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும், உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு 22 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது.

முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் 'நலம் 360' என்ற பெயரில் இலவச வருடாந்திர மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக 51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இரத்த அழுத்தம், இசிஜி, ஹீமோகுளோபின், இரத்த சர்க்கரை அளவு, கிரியேட்டினின் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட 14 அடிப்படைப் பரிசோதனைகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவ மையங்களில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதுமட்டுமின்றி, பொது-தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் கார்ப்பரேஷன் பகுதிகளில் 'வீட்டு வாசலில் நோயறிதல் சேவை' (Home Based Diagnostic Services) தொடங்கப்பட உள்ளது. முன்கூட்டியே முன்பதிவு செய்வதன் மூலம், சுகாதாரப் பணியாளர்கள் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று இரத்த மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் இந்த வசதி அமைகிறது. மேலும், கருத்தரித்தல் சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், நாமகக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 31 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 6 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகளில் 14 கோடி ரூபாய் செலவில் 'நிலை 1' கருத்தரித்தல் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழ்நாடு
#முதியோர்நலம்
#மருத்துவகாப்பீடு
#சுகாதாரத்துறை
#நலம்360
#TamilNadu
#HealthInsurance
#SeniorCitizens
#TNHealth
#Nalam360
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications