எளிதில் அழுகும் உணவுகளைக் கையாள்வதில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை: FSSAI எச்சரிக்கை

அழுகும் தன்மை கொண்ட உணவுப் பொருட்களைக் கையாளும் போது முறையாக குளிர்சாதன வசதியைப் பராமரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என FSSAI எச்சரித்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) எளிதில் கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்களைக் கையாளுதல், சேமித்தல் மற்றும் போக்குவரத்து செய்வதில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முக்கிய அறிவுறுத்தலை ஆணையம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த மாநிலங்களில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சிறப்புச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவா, பன்னீர், இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுப் பொருட்கள் தகுந்த வெப்பநிலையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இத்தகைய பொருட்கள் எளிதில் நுண்மிகள் வளரக்கூடிய தன்மையைக் கொண்டவை என்பதால், அவற்றைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்து ஏற்படும் என்று ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ், உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் கொள்முதல் முதல் நுகர்வோர் கைக்குச் சேரும் வரை அனைத்து நிலைகளிலும் பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலையைப் பராமரிப்பது கட்டாயமாகும்.
உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் சுத்தமாகவும், மூடப்பட்டும், உணவுப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் இருக்க வேண்டும் என்று FSSAI உத்தரவிட்டுள்ளது. மேலும், உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும்போது சாக்கு மூட்டைகள் அல்லது உணவுத் தரத்திற்குப் பொருந்தாத பேக்கிங் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உணவுத் தரச் சான்றிதழ் பெற்ற பேக்கிங் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சேமிப்பின் போது தூசி, ஈரப்பதம், பூச்சிகள் மற்றும் குறுக்கு மாசுபடுதல் ஆகியவற்றிலிருந்து உணவைப் பாதுகாக்க வேண்டியது வணிகர்களின் கடமையாகும்.
இது தொடர்பாக அனைத்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்கள் மற்றும் இந்திய ரயில்வே அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனைகளின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்றும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு வணிகர்கள் தங்களின் சரக்குகளைப் பற்றிய முறையான ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் கேட்கும் போது அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









