வெள்ளித்திரையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்: ஏகன்ஸ் கான்குவெஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் முதல் திரைப்படமாக 'ஏகன்ஸ் கான்குவெஸ்ட்' 2029-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
உலகப்புகழ் பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் பிரபஞ்சம் தனது அடுத்தகட்ட பரிணாமத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸ் திரைப்படம், 'ஏகன்ஸ் கான்குவெஸ்ட்' (Aegon’s Conquest) என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த திரைப்படம் 2029-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், முதல் முறையாகத் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டினின் 'ஃபயர் அண்ட் பிளட்' நாவலை அடிப்படையாகக் கொண்டது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடர்களில் காட்டப்பட்ட நிகழ்வுகளுக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த கதையை இது விவரிக்கிறது. வெஸ்டெரோஸ் கண்டத்தை ஒன்றிணைத்து, டிராகன் வம்சத்தின் ஆட்சியை நிறுவிய ஏகன் டார்கேரியனின் வீரத்தையும், அவரது சகோதரிகளான விசென்யா மற்றும் ரெய்னிஸின் துணையுடன் அவர் மேற்கொண்ட போர் பயணத்தையும் இந்தத் திரைப்படம் கண்முன் கொண்டு வரவுள்ளது.
புகழ்பெற்ற ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் தொடரின் எழுத்தாளரான பியூ வில்லிமன் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். ஏ நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸ் தொடரின் மூன்று எபிசோடுகளை இயக்கிய ஓவன் ஹாரிஸ், இந்தப் படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஏகன் டார்கேரியன் கதாபாத்திரம் முதன்முறையாக நேரடித் திரையில் தோன்றவுள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் 'அயர்ன் த்ரோன்' உருவாக்கமும், ஹாரன்ஹால் தீ விபத்து உள்ளிட்ட பல வரலாற்று நிகழ்வுகள் இதில் விரிவாக இடம்பெற உள்ளன.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் திட்டமிடப்பட்டு வந்த இந்தத் திரைப்படம், தற்போது இறுதிக் கட்ட தயாரிப்பு பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் நடிகர் மற்றும் நடிகையர் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களிடையே இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி தொடர்களுக்கு இணையாகத் திரையரங்கிலும் இந்தப் பிரம்மாண்டமான மாயாஜால உலகம் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









