dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் இந்தியாவின் முதல் தொடு உணர்வு கலைக்கூடம்: பார்வையற்றோர் சிற்பங்களை உணர்ந்து ரசிக்க ஏற்பாடு

By K. ராதாகிருஷ்ணன்
110 views
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பார்வைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பிரத்யேக தொடு உணர்வு கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பார்வைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பிரத்யேக தொடு உணர்வு கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில், பார்வைத்திறன் குறைபாடுள்ளவர்கள் சிற்பக்கலை நுணுக்கங்களை தொட்டு உணர்ந்து ரசிக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக பிரத்யேக தொடு உணர்வு கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டத்தின் சார்பில் இந்த சிறப்பான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள உலக பாரம்பரிய வார விழாவின் ஒரு பகுதியாக, இந்த கலைக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த திட்டத்தின் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் உள்ளது. அகில இந்திய வானொலியில் தொல்லியல் துறை அதிகாரி பி.அறவழி, கோயில் சிற்பங்களின் சிறப்புகள் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பார்வையற்ற நபர் தான் சிற்பங்களை தொட்டுப் பார்க்க விரும்புவதாகத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். அந்த அழைப்பு, தொல்லியல் அதிகாரிகளுக்கு ஒரு புதிய யோசனையை வழங்கியது. ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் கனவை நனவாக்க, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் இந்த அதிநவீன வசதியை உருவாக்க இந்தியத் தொல்லியல் துறை முடிவு செய்தது.

சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலைக்கூடத்தில், கோயிலின் மிகச்சிறந்த சிற்பமான 'சண்டேச அனுக்கிரஹமூர்த்தி' சிலையினுடைய முப்பரிமாண (3D) பிளாஸ்டிக் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் கிரீடம், வயிறு மற்றும் பாதங்களுக்கு அருகே மூன்று சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. பார்வையற்றவர்கள் அந்த இடங்களைத் தொடும்போது, அந்தந்த பகுதியின் சிறப்புகளை விவரிக்கும் ஆடியோ விளக்கம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தானாகவே ஒலிக்கும் வகையில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஒரு வார கால உலக பாரம்பரிய வார விழாவின் ஒரு அங்கமாக, இந்த புதிய கலைக்கூடம் திறந்து வைக்கப்படுகிறது. திருச்சி புத்தூர் அரசு பார்வையற்றோர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தொடக்க விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த முயற்சியால் பார்வைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வரலாற்றின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்றும், இனி வரும் காலங்களில் தஞ்சாவூர் பெரிய கோயில் போன்ற பிற பாரம்பரிய இடங்களிலும் இதுபோன்ற வசதிகளை விரிவாக்க இந்தியத் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#கங்கைகொண்டசோழபுரம்
#தொல்லியல்
#பார்வையற்றோர்
#சிற்பக்கலை
#வரலாற்றுச்சிறப்பு
#GangaikondaCholapuram
#Archaeology
#TamilNaduTourism
#InclusiveTourism
#HeritageSite
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications