ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெம் வீரமணி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு (SIT) சமீபத்தில்தான் தனது பணியைத் தொடங்கியுள்ளது என்றும், விசாரணைக்கு போதிய கால அவகாசம் தேவை என்றும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, சிபிஐ விசாரணை கோரி யூடியூபர் வராகி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறைக்கு மாயாஜால சக்திகள் எதுவும் இல்லை என்றும், அனைத்து ஆதாரங்களையும் திரட்ட போதிய அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டார். புலனாய்வு குழு அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்குமாறு எதிர்பார்ப்பது சரியானதல்ல என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் ஐந்து அதிகாரிகள் மறைமுகமாக செயல்பட்டதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை, சிறப்பு புலனாய்வு குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஜெம் வீரமணி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காணொளி அடங்கிய பென் டிரைவ் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வழக்கை முடிக்க காவல்துறை முயன்ற நிலையில், போக்சோ நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்து மேல்விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் ஊழியர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு, அனைவரும் தற்பொழுது நீதிமன்ற காவலில் உள்ளனர்.
தற்போதைய சூழலில், ஜெம் வீரமணி மீது கூடுதல் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் வந்துள்ளன. இதன் அடிப்படையில் புதிய போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக காவல்துறை தலைவர் மகேஷ் குமார் அகர்வால், இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, விசாரணைக்காக பிரத்யேகமாக அனைத்து பெண் அதிகாரிகளைக் கொண்ட புலனாய்வு குழுவை அமைத்துள்ளார். விசாரணை குழுவில் இருந்த துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலிக்கு பதிலாக வி.கீதா நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









