ஜெம் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

ஜெம் வீரமணி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முறையான விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.
தொழிலதிபர் ஜெம் ஆர். வீரமணி மீது சுமத்தப்பட்டுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக, சிறப்பு விசாரணை குழு (SIT) மேற்கொண்டு வரும் விசாரணையில் எந்தவித சுணக்கமும் இருக்காது என்பதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகனைக் கொண்ட முதன்மை அமர்வு, இந்த வழக்கில் உரிய மற்றும் நியாயமான விசாரணை நடைபெறுவதை நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் ஜி. தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. எனினும், ஏற்கனவே இதே போன்ற மற்றொரு மனு திரும்பப் பெறப்பட்டதையும், தனி நீதிபதி அமர்வு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து சிறப்பு விசாரணை குழுவுக்குத் தொடர் உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தற்போதைய சூழலில் இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி அதைத் தள்ளுபடி செய்தது.
வழக்கின் தீவிரத்தையும், விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பான சில முக்கிய தகவல்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். ஆனால், இந்த மனு விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கருதிய நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
இதற்கிடையே, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் ஆஜராகி, இந்த பொதுநல மனுவானது விசாரணையை முடக்குவதற்காகவும், சில நபர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். மேலும், ஜெம் வீரமணி மீது இதுவரை ஏழு முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஆறு வழக்குகள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பானது என்றும், மற்றொன்று பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை தொடர்பான வழக்கு என்றும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.









