dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழகத்தின் 10 தனித்துவமான வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு: அரசு முக்கிய அறிவிப்பு

By Admin
01/09/2026
87 views
தமிழகத்தின் 10 தனித்துவமான வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு: அரசு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 10 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர். வினோத் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விளைவிக்கப்படும் 10 முக்கிய வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் வெளியிட்ட அறிவிப்பில், அந்தந்தப் பகுதிகளுக்கே உரித்தான தனித்துவமான பண்புகளைக் கொண்ட வேளாண் பொருட்களை உலகளவில் அங்கீகரிக்கச் செய்யும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். காஞ்சிபுரம் பரிமிளகாய், பொயூர் கத்தரி, சிதம்பரம் உளுந்து, கருமந்துறை கடுக்காய், திருவையாறு இலைவாழை, இறையூர் கருணைக்கிழங்கு, கடலூர் வெட்டிவேர், மணப்பாறை கத்தரி, ஊட்டி பூண்டு மற்றும் ஜவ்வாது பேய் எள் ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளின் தரம், முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கும் வகையில், மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் ஒன்பது புதிய விதை சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 11.64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கிடங்குகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காட்டுத்தோட்டம் மற்றும் பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகமங்கலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாலவிடுதி, தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி, சேலம் மாவட்டத்தில் டேனிஷ்பேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் காஞ்சிகுடிக்காடு மற்றும் கீரந்தி ஆகிய இடங்களில் அமைக்கப்படும் என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றில் நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 8.58 கோடி ரூபாய் செலவில் நவீன ஸ்விங்-டைப் ஃபைபிரைசர் கருவிகள் மற்றும் மோட்டார்கள் நிறுவப்பட உள்ளன. இவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குறைந்த திறன் கொண்ட கருவிகளுக்கு மாற்றாக அமையும். இதன் மூலம் சர்க்கரை ஆலையில் கரும்பிலிருந்து சர்க்கரை பிரித்தெடுக்கும் செயல்முறை மேம்படுத்தப்படுவதோடு, சர்க்கரை இழப்பு கணிசமாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குறைந்த மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மிளகாய் சாகுபடியை ஊக்கப்படுத்தும் நோக்கில், அதிக காரத்தன்மை கொண்ட மிளகாய் ரகங்களை நீர்ப்பாசன வசதி கொண்ட பகுதிகளில் சோதனை முறையில் பயிரிட 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் மாற்று சாகுபடி முறைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகவேளாண்மை
#புவிசார்குறியீடு
#விவசாயம்
#தமிழகஅரசு
#வேளாண்துறை
#TamilNaduAgriculture
#GITag
#AgricultureNews
#FarmersWelfare
#TNGovt
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications