dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட தங்க மோதிரம் வழங்கும் திட்டம்: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

By Admin
01/09/2026
41 views
தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட தங்க மோதிரம் வழங்கும் திட்டம்: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தொட்டில் குழந்தை திட்டத்தில் கைவிடப்படும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட 'தொட்டில் குழந்தை திட்டத்தின்' கீழ் அரசு காப்பகங்களில் கைவிடப்படும் குழந்தைகளுக்கும் இந்த தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் தங்க மோதிரத்தை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி பெற்றுக்கொள்வார் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகம் வெளியிட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் (SNCU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் இந்த தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. அதேசமயம், கருவிலேயே உயிரிழந்த குழந்தைகள், பிரசவத்தின்போது உயிரிழந்த குழந்தைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்து பின்னர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தில் தகுதியிருக்காது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கும் சூழலில், அந்த குழந்தையின் தந்தையிடம் முதலில் மோதிரம் ஒப்படைக்கப்படும். தந்தை இல்லாத பட்சத்தில், தாயின் தாயார் (பாட்டி) இந்த மோதிரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அத்தகைய உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சட்டப்பூர்வ ஆவணங்களை சரிபார்த்த பிறகு குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் மோதிரம் ஒப்படைக்கப்படும். இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவும், தங்க மோதிரங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வகுத்துள்ளது.

தங்க மோதிரங்களைச் சேமித்து வைக்கும் மையங்களில் இரு அடுக்கு பூட்டு அமைப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சேமிப்பு மையத்தின் கதவு, தாழ்வாரங்கள் மற்றும் விநியோக மையங்கள் எனப் பல்வேறு இடங்களில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும், இந்த மோதிரங்களை விநியோகிக்கும்போது கேமரா முன்னிலையில் சரிபார்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசவம் முடிந்து தாய் மற்றும் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாளன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிக்குள் தங்க மோதிரம் விநியோகிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகஅரசு
#தங்கமோதிரம்
#பச்சிளம்குழந்தைகள்
#சுகாதாரத்துறை
#தொட்டில்குழந்தை
#TamilNaduGovt
#GoldRingScheme
#NewbornCare
#PublicHealth
#ChennaiNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications